இன ரீதியாக வேறுபடும் ( racial polarisation ) போக்கு குறித்து முஹைடின் அச்சம்

muhiaddinஅரசாங்கம் நல்ல நோக்கத்துடன் எடுக்கும் முயற்சிகள்- இன ரீதியாக வேறுபடும்  போக்கினால் இனப் பிரச்னைகளாகி விடுவது குறித்து துணைப் பிரதமர் முஹைடின்  யாசின் கவலை தெரிவித்துள்ளார்.

எடுத்துக்காட்டுக்கு 2013-2015 கல்வி மேம்பாட்டுப் பெருந்திட்டம் ‘நல்ல
நோக்கங்களை’ கொண்டிருந்த போதிலும் அதனை சீனக் கல்விப் போராட்ட  அமைப்பான டோங் ஜோங் நிராகரித்துள்ளது என அவர் சொன்னார்.

“நல்ல நோக்கத்துடன் அது தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது இனவாதமானது.  13 ஆண்டுகளில் தாய்மொழியை அழிக்கும் முயற்சி அது என அதன் அமலாக்கம்  பார்க்கப்படுகின்றது,” என அவர் சொன்னதாக பெர்னாமா தகவல் குறிப்பிட்டது.

‘அல்லாஹ்’ என்ற சொல்லை முஸ்லிம் அல்லாதாரும் பயன்படுத்த வேண்டும் என்ற  கோரிக்கையும் இன ரீதியாக வேற்படுவதற்கு இன்னொரு எடுத்துக்காட்டு என  அவர் சொன்னதாக நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸும் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈப்போவில் நோன்பு துறக்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட முஹைடின்,  சவால்களை சமாளிப்பதற்கு முஸ்லிம்கள் ‘ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்றும்  இல்லை என்றால் ‘எதிர்காலத்தில் பிரச்னைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும்’
என்றும் அவர் சொன்னதாகவும் கூறப்பட்டுள்ளது.