வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் எனத் தான் அண்மையில் அறிவித்தது தவறு என்றால் எங்கள் மீது இன்னேரம் வழக்குப் போடப்பட்டிருக்கும் என பாஸ் இளைஞர் பிரிவு கூறுகிறது.
அதற்குப் பதில் அரசாங்கம் “மறுக்கும் போக்கை” பின்பற்றி வருகிறது என அதன் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் நஸ்ருதின் ஹசான் கூறினார்.
“நாங்கள் அம்பலப்படுத்திய பல விஷயங்களுக்காக இது வரையில் பாஸ் இளைஞர் பிரிவு மீது யாரும் வழக்குப் போடவில்லை. நீதிமன்றத்துக்கு எங்களை இழுக்கவும் இல்லை.”
“அதற்கு பதில் பாஸ் இளைஞர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு தேர்தல் ஆணையமும் தேசியப் பதிவுத் துறையும் ஊடகங்கள் வழியாகவே பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன”, என்றார் அவர்.
வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் ஒரே பெயர் இருப்பது, அடையாளம் இல்லாத பதிவுகள், மற்ற முறைகேடுகள் பற்றி தெரிவித்த பின்னர் பாஸ் இளைஞர் பிரிவு மீது குறை கூறப்பட்டது. ஆனால் அவை அம்பலமான பின்னர் வாக்காளர் பட்டியலிலிருந்து 50,000 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
“இது முன் எப்போதும் நிகழ்ந்திருக்காத நடவடிக்கை ஆகும். ஆட்சேபம் செய்யப்பட்டு அதற்கான கடிதமும் கட்டணமும் செலுத்தப்பட்டால் மட்டுமே வாக்காளர்களுடைய பெயர்களை நீக்க முடியும்”, என்றும் நஸ்ருதின் தெரிவித்தார்.
தவறான தகவல்கள் பரப்பப்படுவதைத் தவிர்க்கவும் அவதூறு வழக்குகளைத் தவிர்க்கவும் புள்ளிவிவரங்களையும் ஆதாரங்களையும் ஆவணங்களையும் ஆழமாக ஆய்வு செய்த பின்னரே பாஸ் இளைஞர் பிரிவு முறைகேடுகளை அம்பலப்படுத்தியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் மிகவும் கட்டுக்கோப்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஏனெனில் எங்கள் அறிக்கை ஒவ்வொன்றும் எங்களுடைய அரசியல் எதிரிகளால் ஆய்வு செய்யப்படும் என்பதும் அது தவறாக அல்லது அவதூறாக இருந்தால் நாங்கள் நீதிமன்றத்துக்கு இழுக்கப்படுவோம் என்பதும் எங்களுக்குத் தெரியும்.”
சுஹாய்சான் காயாட்டைத் தலைவராகவும் முகமட் அட்ராம் மோசஸை துணைத் தலைவராகவும் கொண்ட ஜனநாயக மறுவாழ்வு, மக்கள் திரட்டுப் பிரிவு வழியாக பாஸ் இளைஞர்கள் ஜனநாயக நடைமுறைகளில் காணப்படுகின்ற பல பலவீனங்களையும் முறைகேடுகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் நஸ்ருதின் தெரிவித்தார்.
போலீஸ் தோற்றமே கேள்விக்குறியாகி உள்ளது
240 அந்நியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விவகாரத்தில் அவர்கள் வர்த்தகப் பயிற்சி வகுப்பு ஒன்றில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது குறித்துக் கருத்துரைத்த நஸ்ருதின், எதற்கெடுத்தாலும் “மறுப்புக் கூறும் தொற்று நோய்” போலீசையும் பற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது என்றார்.
மை கார்டு கும்பல் என வருணிக்கப்பட்டுள்ள ஒரு கும்பலுடன் ஒத்துழைப்பதின் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கும் ஆட்சியுரிமைக்கும் காவலன் என்ற தங்களது பெருமைக்கு போலீசார் களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் சாடினார்.
சிப்பாங் ஒசிபிடி-யின் வாதம் நியாயத்துக்கு முரணானது
“அந்நியர்களுக்கு தொழில் முனைவர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது போன்ற நிகழ்வு குறித்து நான் கேள்விப்படுவது இதுவே முதன் முறை.”
“ஒரு வேளை மலேசியா போலே என்ற உணர்வுக்குள் அதுவும் நடக்கலாம்,” என நஸ்ருதின் வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
“மக்களுக்குத் தெளிவான விளக்கம் தேவை. நகைச்சுவைக்குரிய காரணங்கள் அல்ல.”
2008ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 27,293 அந்நியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட செய்தியே நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது”, என அவர் மேலும் சொன்னார்.
குடியுரிமை வழங்கப்படுவதற்கான மோசடி என்று கூறப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை இந்தோனிசியர்களையும் வங்காள தேசிகளையும் கொண்டு வந்த பஸ்களை பாஸ் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்தனர்.
அந்த அந்நியர்கள் அனைவரும் “தொழில் முனைவர் பயிற்சிக்காக” பாங்கி ஒய்வுத் தலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என சிப்பாங் ஒசிபிடி அளித்த விளக்கத்தை நேற்று பெரித்தா ஹரியான் வெளியிட்டிருந்தது.
ஆனால் அங்கு போலீசார் காணப்பட்டதும் பயிற்சிக்குக் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்ததும் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக பாஸ் உறுப்பினர்கள் கூறிக் கொண்டனர்.
இதனிடையே சிப்பாங் ஒசிபிடி அளித்த விளக்கத்தை நிராகரித்த பாஸ் ஜோகூர் இளைஞர் பிரிவுத் தலைவருமான சுகாய்சான், இந்த நாட்டுக்கு விவசாயத் தொழிலாளர் என்னும் வேலை அனுமதியில் வந்த அந்நியத் தொழிலாளர்களுக்கு “முதல் வகுப்பு மரியாதை” கொடுக்கப்பட்டு “தொழில் முனைவர் பயிற்சியில்” பங்கு கொண்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.