ஜனவரி தொடக்கம் புதிய மை கார்டுகள் வெளியிடப்படும்

என்ஆர்டி என்ற தேசியப் பதிவுத் துறை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய மை கார்டுகளை அறிமுகம் செய்யும். அது கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றிருக்கும் என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் இன்று கூறினார்.

போலியாகத் தயாரிக்கப்படுவதைத் தடுக்கக் கூடிய அம்சங்களைக் கொண்ட கணினி சில்லுகள் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களில் அடங்கும் என்று அவர் சொன்னார்.

“புதிய அமைப்பைக் கொண்ட மை கார்டு உயர்ந்த தரத்தில் இருக்கும். பாதுகாப்புத் தேவைகளை அது பூர்த்தி செய்யும். காலத்திற்கு ஏற்பவும் சூழ்நிலைக்கு ஏற்பவும் எதிர்கால சவால்களை சமாளிக்கும் வகையிலும் அது தயாரிக்கப்பட்டிருக்கும்”, என அவர் புதிய மைகார்டு அமைப்பை குளுவாங்கில் அறிமுகம் செய்த பின்னர் ஹிஷாமுடின் நிருபர்களிடம் பேசினார்.

புதிய மை கார்டு போலி கார்பனேட் அமைப்பில் இருக்கும் என்றும்  லேசர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருக்கும்  என்றும் கணினி சில்லுகளை சிரிமும் அங்கீகாரம் பெற்ற மின் கடத்தி ஆய்வுக் கூடங்களும் சோதனை செய்துள்ளன என்றும்  ஹிஷாமுடின் தெரிவித்தார்.

“புதிய விண்ணப்பதாரர்களுக்கு புதிய மை கார்டுகள் வழங்கப்படும் வேளையில் மை கார்டுகளை வைத்திருப்பவர்கள், தங்களது பழைய மைகார்டுகளை புதிய மைகார்டுகளுக்கு மாற்றிக் கொள்ளலாம்.”

மை கார்டுகளை வைத்திருக்காத மலேசியக் குடிமக்களை குறிப்பாக ஒதுக்குப்புறமான பகுதிகளில் வைத்திருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு என்ஆர்டி தனது நடமாடும் சேவைகளைப் பயன்படுத்தும் என்றும் செம்பெரோங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிஷாமுடின் தெரிவித்தார்.

பெர்னாமா