சுங்கை சிப்புட், கம்பங் லாசாவில் (Kampung Lasah) ஒரு மீட்டர் ஆழமுள்ள வெள்ள நீரில் ஒரு வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட மூன்று பேரை அதிகாரிகள் மீட்டனர்.
சிவில் பாதுகாப்புப் படையின் சுங்கை சிப்புட் (Sungai Siput) செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம், அதிகாலை ஏற்பட்ட வெள்ளத்தினால் கம்போங் லாசாவைச் (Kampung Lasah) சுற்றியுள்ள பல சாலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை சுங்கை சிப்புட், கம்போங் லாசாவில் நான்கு மணி நேரத் தொடர் கனமழைக்குப் பிறகு, வெள்ள நீர் ஒரு மீட்டர் உயரத்திற்கு உயர்ந்ததில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கின.
கம்போங் செனின், கம்போங் ஜோங் மற்றும் கம்போங் பாவோங் உள்ளிட்ட சுற்றுப்புறச் சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளதாக சுங்கை சிப்புட் சிவில் பாதுகாப்புப் படை நடவடிக்கைக் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிகாலை 1.24 மணிக்கு எங்களுக்கு அவசர அழைப்பு வந்தது. கனமழை நான்கு மணி நேரம் நீடித்தது, ஆனால் காலை 6 மணி அளவில் தூறலாகக் குறைந்தது”.
“சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து வழிகள் துண்டிக்கப்பட்டன. நிலைமையைக் கண்காணிக்க எங்கள் பணியாளர்கள் அந்த இடத்திற்குச் சென்றுள்ளனர். இதுவரை நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி, தற்காலிக நிவாரண மையங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இருப்பினும், சில குடியிருப்பாளர்கள் அண்டை வீட்டார் அல்லது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றுள்ளனர். தற்போது வானிலை சீரடைந்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளத்தில் சிக்கிய ஒரு முதியவர், ஒரு மாற்றுத்திறனாளி பெண் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் மீட்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்தார்.
அதிகாலை 4.13 மணிக்குத் துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக அவர் கூறினார். சுங்கை பெலூஸ் ஆறு வழிந்து ஓடியதால் வெள்ளம் ஏற்பட்டதாகவும், மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது நீர்மட்டம் சுமார் ஒரு மீட்டர் வரை இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
“வெள்ளம் புகுந்த வீட்டிற்குள் 80 வயது முதியவர், 55 வயது மாற்றுத்திறனாளி பெண் மற்றும் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆடவர் இருப்பதைக் கண்டறிந்தோம். நீர்மட்டம் உயர்ந்தால் மற்ற கிராம மக்களையும் வெளியேறுமாறு செயல்பாட்டுத் தலைவர் அறிவுறுத்தினார்,” என்று சபரோட்ஸி ஒரு தனி அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மூவரும் கிராமக் குழு உறுப்பினர்களின் உதவியுடன் தற்காலிகமாக கம்போங் லாசா சமூக நலக்கூடத்திற்கு மாற்றப்பட்டனர்.
“தற்போது நீர்மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. அவ்வப்போது மேலதிக கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்,” என்று கூறிய அவர், காலை 9.50 மணிக்கு மீட்பு நடவடிக்கை நிறைவடைந்ததாகத் தெரிவித்தார்.
























