மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal) அனுமதி மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, கோவில் நிர்வாகத்திற்கு ரிம 10,000 செலவுத் தொகையாக (costs) வழங்குமாறு உத்தரவிட்டது.
கோயில் நிர்வாகத்தின் வழக்கறிஞர், மேல்முறையீடு செய்வதற்கான அனுமதி கோரும் மனுவை திரும்பப் பெறுமாறு தனது கட்சிக்காரர் அறிவுறுத்தியுள்ளதாக மூன்று நீதிபதிகள் கொண்ட மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்விடம் தெரிவித்தார்.
ரவாங் இந்து கோயிலான ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் கோயிலில் இடிப்புப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து நில உரிமையாளரான யாயாசன் குப்ராவைத்(Yayasan Kubra) தடுக்கும் மெஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவை மீண்டும் அமல்படுத்துவதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தை கோயில் நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அமண்டா சோனியா மேத்யூ, மேல்முறையீடு செய்வதற்கான அனுமதி விண்ணப்பத்தை திரும்பப் பெறுமாறு தமக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தொடங்கியதால், கோயில் நிர்வாகம் அதன் மேல்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன், மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் இருந்து முதலில் அனுமதி பெற வேண்டியிருந்தது.
இந்த அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி நூரின் பதருடின், மற்றும் நீதிபதிகள் ராட்ஜி அப்துல் ஹமீத், மீயோர் ஹாஷிமி அப்துல் ஹமீத் ஆகியோர், விண்ணப்பம் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அதைத் தள்ளுபடி செய்ததுடன், யாயாசன் குப்ராவுக்கு ரிம 10,000 கட்டணமாகச் செலுத்த கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர்.
யாயாசன் குப்ரா சார்பில் அகமத் கலீல் ரோஃபி, ஹரிஸ் யூசோஃப், ஜைனல் ரிஜால் அபு பாக்கார், டானியல் ஃபர்ஹான் ஜைனல் ரிஜால் மற்றும் அர்ஹாம் ரஹிமி ஆகியோர் ஆஜராகினர்.
மார்ச் 31 அன்று, யாயாசன் குப்ரா கோயிலை இடிப்பதற்குத் தற்காலிகமாகத் தடை விதித்திருந்த சிலயாங் மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நிலம் தொடர்பான தகராறு நிலவுவதால், யாயாசன் குப்ரா கோயில் பகுதியில் இடிப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாது என்று மெஜிஸ்திரேட் சாய் குவான் ஹாக் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, மார்ச் 13 அன்று அந்த இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
1995 முதல் அந்த இடத்தில் கோயில் இருந்து வருவதாகவும், தற்போதைய நில உரிமையாளர் 2021 முதல் அந்த நிலத்தைச் சொந்தமாக வைத்துள்ளார் என்றும் சாய் குறிப்பிட்டிருந்தார்.
பிப்ரவரி 11 அன்று, கோயிலின் ஒரு பகுதியை இடிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் நான்கு ஆண்களை காவல்துறை கைது செய்தபோது இந்த நிலத் தகராறு வெளிச்சத்திற்கு வந்தது.
கோயில் நிர்வாகத்துடன் கலந்துரையாடாமலும், சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமலும் அந்த நபர்கள் கோயிலின் ஒரு பகுதியை இடித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஷாஸேலி காஹார் பின்னர் தெரிவித்தார். அதன்பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
யாயாசன் குப்ராதான் நிலத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் என்பதை கோயில் நிர்வாகம் மறுக்கவில்லை என்றாலும், கோயிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று அது தொடர்ந்து கூறி வருகிறது.
























