முன்னாள் பிரதமர் நஜீப் அப்துல் ரசாக், தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதற்கான நிபந்தனையாக விதிக்கப்பட்ட ரிம 50 மில்லியன் அபராதத் தொகையை இன்னும் செலுத்தவில்லை.
இந்த அபராதத் தொகை கோலாலம்பூர் உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும் என்று தலைமை வழக்கறிஞர் துசுகி மொக்தார் தெரிவித்துள்ளார், ஏனெனில் வழக்கு அங்குதான் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.
“இதுவரை, நஜீப்பின் குடும்பத்தினர் அபராதத் தொகையைச் செலுத்தவில்லை. கட்டணம் செலுத்தப்பட்ட பின்னரும், நஜீப் எப்போது வீட்டிற்கு அழைத்து வரப்படுவார் என்று என்னால் சரியாகச் சொல்ல முடியாது, ஏனெனில் இந்த நடைமுறைக்கு சிறிது காலம் ஆகலாம்,” என்று இன்று தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
மேலும், வீட்டுக்காவல் நடைமுறைப்படுத்துவதற்கான நிலையான வழிகாட்டு நடைமுறைகள் (SOP) சிறைத்துறையால் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று காஜாங் சிறையில் பெர்னாமா நடத்திய ஆய்வில், முன்னாள் பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான நஜீப் தொடர்பான எந்தவொரு சிறப்பு நடவடிக்கைகளும் காணப்படவில்லை.
எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் சென்டிரியான் பெர்ஹாட் (SRC International Sdn Bhd) நிறுவனத்திற்குச் சொந்தமான ரிம 42 மில்லியனைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகத் தண்டனை பெற்றதைத் தொடர்ந்து, 73 வயதான நஜீப், ஆகஸ்ட் 23, 2022 முதல் காஜாங் சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.
செப்டம்பர் 18 அன்று, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், நஜீப்பிற்கு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை வழங்கினார். இதன் மூலம், எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கிற்கான தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை ஆகஸ்ட் 23, 2028 வரை வீட்டுக்காவலில் கழிக்க அவர் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் படிக்க: நஜீப்பின் நிபந்தனை மன்னிப்பு எஸ்.ஆர்.சி இன்டர்நேஷனல் வழக்கிற்கு மட்டுமே பொருந்தும் – தலைமை வழக்கறிஞர்
இந்த ஏற்பாடானது RM50 மில்லியன் அபராதத்தைச் செலுத்துவதற்கும், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்குக் கட்டுப்படுவதற்கும் உட்பட்டதாகும்.
























