நஜிப்பின் வீட்டுக்காவல் சட்டவிரோத தடுப்புக்காவலாக மாறக்கூடும் என சைஃபுதீன் எச்சரிக்கை

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நீதிமன்ற விடுதலை உத்தரவின் முரண்பாடான விளக்கங்களுக்குத் தீர்வு காணாமல், அவரை வீட்டுக்காவலில் வைப்பது ‘தவறான தடுப்புக்காவலாக’ அமையக்கூடும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் அச்சம் தெரிவித்துள்ளார்.

நஜிப்பிற்கு வழங்கப்பட்ட நிபந்தனைக்கால பொதுமன்னிப்பு மற்றும் நீதிமன்ற உத்தரவு ஆகிய இரண்டுக்கும் இடையில் உள்துறை அமைச்சகம் சிக்கியுள்ளதாக அவர் கூறினார். நஜிப் தனது 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தைச் செலுத்திய பிறகு, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சிறைத்தண்டனையின் மீதமுள்ள காலத்தை வீட்டுக்காவலில் அனுபவிக்க இந்த பொதுமன்னிப்பு அனுமதிக்கிறது. ஆனால், மற்றொருபுறம் நீதிமன்ற உத்தரவோ “விடுதலை” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு ‘விடுவிப்பு’ என்று குறிப்பிடுகிறது, ஆனால் கூட்டரசு பிரதேசங்களின் பொதுமன்னிப்பு வாரியமோ ‘வீட்டுக்காவல்’ என்று கூறுகிறது, என விளக்கினார்.

வீட்டுக்காவல் என்பது விடுதலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதில் ஏதேனும் தெளிவற்ற தன்மை (முரண்பாடு) இருந்தால், நாங்கள் அதனை நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்வோம்,” என்று இங்குள்ள பெங்காலான் கிளிங் பகுதியில் மீனவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒரு வாக்கியத்தையோ அல்லது ஒரு கமாவையோ கூட எதிர்க்கவில்லை,” என்று கூறிய அவர், வெவ்வேறு சட்ட விளக்கங்கள் காரணமாக உள்துறை அமைச்சகம் தலைமை அரசு வழக்கறிஞரின் ஆலோசனையைக் கோரியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்திற்குத் தீர்வு காண நீதிமன்றங்களே சரியான இடம் என்றும், நீதிமன்றத்தின் முடிவை அமைச்சகம் மதிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தலைமை அரசு வழக்கறிஞர் எப்போது இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்கு மாற்றுவார் என்று கேட்கப்பட்டதற்கு, இதற்கான நடவடிக்கைகள் எப்போது தொடங்கப்படும் அல்லது எந்தத் தரப்பு இந்த விவகாரத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லும் என்பது குறித்து தனக்குத் தகவல் எதுவும் இல்லை என்று சைஃபுதீன் கூறினார்.

கடந்த நவம்பர் 6-ஆம் தேதி, நஜிப்பிற்கான 50 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையை தாங்கள் செலுத்திவிட்டதாக அம்னோ தெரிவித்தது. இதன் மூலம் அவர் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் அனுபவிக்க முடியும் என்றும் கூறப்பட்டது.

இருப்பினும், நீதிமன்ற உத்தரவில் உள்ள முரண்பாடான விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்தப்படும் வரை, இதனைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு தலைமை அரசு வழக்கறிஞர் அலுவலகம் கேட்டுக்கொண்டது.

 

 

 

-fmt