பெருந்தோட்ட நிறுவனங்கள் இயந்திரமயமாக்கல் மூலம் தொழிலாளர் சார்பைக் குறைப்பதற்கு உறுதியளித்தால், செம்பனை அறுவடைக்காக வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்துவதற்கு ஒப்புதல் அளிப்பது குறித்துப் பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
நேற்று இங்கு நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய அன்வார், இத்துறையின் தொழிலாளர் தேவையை ஏற்றுக்கொண்ட போதிலும், நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலில் முதலீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
வெளிநாட்டுத் தொழிலாளர் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிப்பதில் ஏற்படும் தாமதம் அடுத்த ஆண்டு செம்பனை உற்பத்தியைப் பாதிக்கக்கூடும் என்று தொழில்துறைப் பிரதிநிதி ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
உரமிடுதல் மற்றும் களைக் கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு ஏற்கனவே இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆனால் அறுவடைப் பணிகள் இன்னும் மனித உழைப்பையே பெருமளவில் சார்ந்துள்ளதாகவும் அந்தப் பிரதிநிதி தெரிவித்தார்.
இது குறித்துச் சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் பேசி, கோரிக்கையைப் பரிசீலிப்பதாக அன்வார் கூறினார்.
குறிப்பாக அறுவடைப் பணிகளுக்கு மட்டுமென்றால், சரி. அதற்கு நாங்கள் ஒப்புதல் அளிப்போம். ஆனால், இயந்திரமயமாக்கல் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதாக நீங்கள் உறுதியளிக்க வேண்டும், என்று அவர் கூறினார்.
மேலும், லாபம் ஈட்டும் பெருந்தோட்ட நிறுவனங்கள் இயந்திரமயமாக்கலில் போதுமான அளவு முதலீடு செய்யத் தவறியதை விமர்சித்த அன்வார், மோசமான வாழ்க்கைச் சூழலில் தங்கவைப்பது உள்ளிட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீதான சுரண்டல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.
பரந்த அளவிலான வேளாண் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய பிரதமர், நவீனமயமாக்கல் முயற்சிகளில் சிறுதோட்ட உரிமையாளர்களையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்ததோடு, மானியங்கள் மற்றும் உதவிகளை அதிகளவில் சார்ந்திருப்பது தொடர்ந்து பிறரைச் சார்ந்திருக்கும் நிலையையே நீடிக்கச் செய்யும் என்றும் எச்சரித்தார்.
இதனிடையே, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்திற்கு வேளாண் துறையின் பங்களிப்பு கணிசமாக அதிகரித்துள்ளதாக வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் முகமது சாபு தெரிவித்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண் துறையின் பங்களிப்பு 500 கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
பொறியியல் பின்னணி கொண்டவர்கள் உட்படப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பலர் நவீன விவசாயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களில் சிலர் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் உயர் மதிப்புப் பயிர் சாகுபடி மூலம் கோடீஸ்வரர்களாக உருவாகியுள்ளதாகவும் முகமது சாபு தெரிவித்தார்.
-fmt
























