கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முறையற்ற வழிபாட்டுச் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றத்தை ஒப்புக்கொண்ட 21 வயதான அலிஃப் டேனியல் அட்லிக்கு, உலு யாமில் உள்ள சிலாங்கூர் இஸ்லாமிய சமயத் துறையின் (JAIS) மறுவாழ்வு மையத்தில் மூன்று மாதங்கள் சமய மறுவாழ்வுப் பயிற்சி பெற வேண்டும் என கோம்பாக் பாராட் ஷரியா கீழ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு சிலாங்கூர் ஷரியா குற்றங்கள் சட்டத்தின் 54(1) பிரிவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் கீழ், குற்றம் புரிந்தவர்களைச் சீர்திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி இரவு 9 மணி முதல் 11 மணி வரை பத்து மலையில் உள்ள ஓர் இந்துக் கோவிலில் மற்றொரு மதத்தைச் சேர்ந்த சமயப் பொருட்களை எடுத்துச் சென்றதாக, அந்தச் சட்டத்தின் 4(1) பிரிவின் கீழ் அலிஃப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக ரிம 3,000 அபராதம், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இவ்விரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
2024ஆம் ஆண்டு தைப்பூசத் திருவிழாவின்போது பத்து மலையில் நடைபெற்ற இந்து சமயச் சடங்குகளில் அலிஃப் பங்கேற்றதைக் காட்டும் காணொளிகளும் புகைப்படங்களும் அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அப்போது அவர் தனது முகத்தில் திரிசூலம் போன்ற வடிவிலான ஒரு பொருளைக் குத்தியிருந்தார். மேலும், இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற சுத்திகரிப்புச் சடங்கில் அவர் பங்கேற்றதாகவும், தன்னை ஆன்மிகக் குணப்படுத்துபவராக அடையாளப்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படும் காணொளிகளும் இணையத்தில் பரவின.
சிறைத்தண்டனையைவிட மறுவாழ்வுப் பயிற்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஷரியா அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஸம்னியாசுரா சரின் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
குற்றம் சாட்டப்பட்டவருக்கு அறிவுரை வழங்கிய ஷரியா நீதிபதி பைசல் ஹபீப், இந்தக் குற்றம் இஸ்லாமிய நம்பிக்கைக்கு எதிரான கடுமையான மீறல் என்றும், இது ஷிர்க் (இறைவனுக்கு இணை வைத்தல் அல்லது பல தெய்வ வழிபாடு) தொடர்பானது என்றும் வலியுறுத்தினார்.
“நீதிமன்றம் விதிக்கும் இந்த நடவடிக்கை வெறுமனே தண்டனைக்காக மட்டுமல்ல. இது உங்கள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும், இதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களையும் கருத்தில் கொண்டதாகும்,” என்று கூறிய நீதிபதி, அலிஃப் உண்மையான மனமாற்றத்துடன் பாவமன்னிப்புக் கோரும் தவ்பா நஸூஹா வை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
நீதிமன்றத்தில் வழக்கறிஞர் இன்றி ஆஜரான அலிஃப், தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்ததுடன், அண்மையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட தனது தாயைப் பராமரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தமக்கு மன்னிப்பு வழங்குமாறு கோரினார்.
முகநூலில் பதிவிடப்பட்ட புகைப்படங்கள் 2024ஆம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும், அப்போது தனக்கு 18 வயது என்றும் குறிப்பிட்ட அவர், அந்தப் புகைப்படங்கள் ஏன் அண்மையில் மீண்டும் வெளியாகின என்றும் கேள்வி எழுப்பினார்.
“ஷரியா சட்டத்திற்கு முரணான செயல்களிலோ அல்லது ஷிர்க் தொடர்பான நடவடிக்கைகளிலோ நான் இனி ஈடுபடுவதில்லை. நான் மாறிவிட்டேன், மனம் திருந்திவிட்டேன்,” என்று நீதிமன்றத்தில் தெரிவித்த அவர், சிறைத்தண்டனைக்குப் பதிலாக சமய வழிகாட்டல் வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்குமாறு கோரினார்.
























