ரத்து செய்யப்பட்ட திட்டங்களுக்கு ஆவணப்பூர்வ ஆதாரம் தேவை – ஜாஹிதுக்கு ராயர் நெருக்கடி

ஆர்.எஸ்.என் ராயர் (PH-ஜெலுத்தோங்), சபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமப்புற வளர்ச்சித் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் கடிதத்தை துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிதி (BN-பாகன் டத்தோ) சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியுள்ளார். மக்களவையில் கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சின் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், சபா மற்றும் சரவாக்கில் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறும் கடிதம் எங்கே? நான் விளக்கம் கோருகிறேன் என்று கூறினார்.

துணைப் பிரதமர் தன்னிடம் இந்த ரத்துகளுக்கான ஆவணப்பூர்வ ஆதாரங்கள் இருப்பதாக செவ்வாய்க்கிழமை கூறியிருந்த கூற்றையே ராயர் இங்கு குறிப்பிட்டுக் காட்டினார். இருப்பினும், எந்தவொரு திட்டங்களுக்கும் ஏற்கனவே ஒப்புதல் கடிதங்கள்  வழங்கப்பட்டிருந்தால், அவை ரத்து செய்யப்படவில்லை என்று நிதி அமைச்சகம் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ள போதிலும், ஜாஹித் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த சர்ச்சை அக்டோபர் 26 அன்று தொடங்கியது. அப்போது கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சருமான ஜாஹித், நிதி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், 2026-ஆம் ஆண்டிற்காக அங்கீகரிக்கப்பட்ட சில திட்டங்கள் கிராமப்புற மற்றும் பிராந்திய வளர்ச்சி அமைச்சின் பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவித்தார்.

ஒப்பந்தக்காரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதங்கள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், ஒப்பந்தக்காரர்களுக்கான நிலுவைத் தொகைகள் செலுத்தப்படும் வரை புதிய கடிதங்களை வழங்குவதை மட்டுமே அரசாங்கம் ஒத்திவைத்துள்ளது என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட எந்தவொரு கடிதங்களும் ரத்து செய்யப்படவில்லை என்றும் இரண்டாம் நிதி அமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இக்கூற்று கோபமடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட ராயர், ஜாஹித் ஏன் இந்தத் குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த சபையில் இவ்வளவு பொறுப்பற்ற ஒரு அறிக்கையை வெளியிட்டார்?” என்று கேள்வி எழுப்பிய அவர், அரசாங்கத்தைக் குலைக்க (சதி செய்ய) ஜாஹித் முயற்சிக்கிறாரா என்றும் மீண்டும் கேள்வி எழுப்பினார். எனினும், இந்த வார தொடக்கத்தில் ஜாஹித் இந்த குற்றச்சாட்டை மறுத்திருந்தார்.

இந்த விஷயத்தை தான் யாரோ தூண்டிவிட்டு எழுப்பவில்லை என்றும், சொந்த முயற்சியிலேயே எழுப்புவதாகவும் ராயர் வலியுறுத்தினார். நாம் நண்பர்களாக இருக்க விரும்பினால், உண்மையாக இருக்க வேண்டும். விஷயங்களை மறைத்துவிட்டு ஒருவருக்கொருவர் முதுகில் குத்தக் கூடாது, என்று அவர் கூறினார்.

இத்திட்டங்களுக்கான ஒப்புதல் கடிதங்களை ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து தான் கூறிய கருத்துக்கள் துல்லியமானவை என்றும், அதிகாரப்பூர்வ உத்தரவுக்கான ஆவணப்பூர்வ ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தான் தயாராக இருப்பதாகவும் செவ்வாய்க்கிழமை ஜாஹித் தெரிவித்தார்.

 

 

 

 

-fmt