நஜிப் இல்லம் அருகே நடமாடும் காவல் நிலையம் அமைப்பு

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சிறையிலிருந்து வீட்டிற்கு மாற்றப்படும்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை எளிதாக்குவதற்காக, லங்காட் டூத்தாவில் உள்ள அவரது இல்லத்தின் அருகே நாளை முதல் நடமாடும் காவல் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

செந்தூல் காவல்துறைத் தலைவர் அன்வார் பக்ரி சலாம் கூறுகையில், இந்த நடமாடும் காவல் நிலையம் நஜிப்பிற்கு 24 மணி நேரப் பாதுகாப்பை வழங்குவதற்காக அமைக்கப்படவில்லை என்றார்.

அவர் வீடு திரும்பும் போது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள், அண்டை வீட்டார் ஆகியோருக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், ஆதரவாளர்களின் வருகையை மேலாண்மை செய்யவும் இது அமைக்கப்படுகிறது.

நஜிப்பின் வீட்டுக்காவலுக்கான இடமாக இந்த இல்லம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, காவல்துறைக்கு இன்னும் எந்தவொரு அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலும் வரவில்லை என்று அன்வார் கூறினார்.

என்னாலும் இதை உறுதிப்படுத்த முடியாது, ஏனெனில் எனக்கும் எந்தத் தகவலும் வரவில்லை. ஆனால், நஜிப்பின் அதிகாரப்பூர்வ இல்லங்களில் ஒன்று எனது அதிகார வரம்பிற்குள் வருகிறது. அவருக்குச் சொந்தமான பிற இல்லங்களும் பரிசீலிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, என்று அவர் கூறினார்.

தனக்குக் கிடைத்த தகவலின்படி, நஜிப் தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழித்தால், அவரைக் கண்காணிக்கும் பொறுப்பு சிறைச்சாலைத் துறையிடமே இருக்கும் என்று அவர் கூறினார்.

நேற்று சிறைச்சாலைத் துறையின் நான்கு அதிகாரிகள் இந்த இல்லத்திற்கு வந்து சோதனை மற்றும் மதிப்பீட்டை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

காவல்துறை நஜிப்பின் நடமாட்டத்தை எளிதாக்குவதுடன், அதே நேரத்தில் ஊடகங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்.

இந்தச் செயல்முறையின் போது ஒரு மேற்பார்வையாளர் மற்றும் இரண்டு காவலர்களைக் கொண்ட குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு ஆதரவாக நடமாடும் ரோந்து வாகன பிரிவு இருக்கும்.

அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்த பிறகு, நஜிப்பின் வீட்டுக்காவல் தொடர்பான வருகைகள், பாதுகாப்பு மற்றும் அவரது நடமாட்டங்களைக் கண்காணிப்பது உள்ளிட்ட விஷயங்கள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் கீழ் கொண்டுவரப்படும் என்று அட்டர்னி ஜெனரல் துசுகி மொக்தார் நேற்று தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கில் நஜிப் (73) தனது மீதமுள்ள சிறைத்தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு ஏதுவாக, மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் கடந்த வெள்ளிக்கிழமை அவருக்கு நிபந்தனையுடனான மன்னிப்பை வழங்கியுள்ளார். எனினும், இது அவரது 50 மில்லியன் ரிங்கிட் அபராதம் மற்றும் பிற நிபந்தனைகளைச் செலுத்துவதற்கு உட்பட்டதாகும்.

அட்டர்னி ஜெனரல், கூட்டரசு பிரதேச அமைச்சர் மற்றும் பேரரசரால் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியத்தின்  கூட்டங்களுக்கு பேரரசர் தலைமை தாங்குவார்.

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, நஜிப் விதிக்கப்பட்ட அனைத்து நிபந்தனைகளுக்கும் இணங்க வேண்டும் என்றும், தவறினால் இந்த நிபந்தனையுடனான மன்னிப்பு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. எனினும், அந்த நிபந்தனைகள் குறித்த விவரங்களை அது வழங்கவில்லை.

1MDB-இன் முன்னாள் துணை நிறுவனமான SRC இன்டர்நேஷனலுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் தொடர்பான அதிகார துஷ்பிரயோகம், நம்பிக்கைத் துரோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக நஜிப்பிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து, அவர் 2022 ஆகஸ்டில் சிறையில் அடைக்கப்பட்டார்.

பிப்ரவரி 2024-இல் கூட்டரசு பிரதேச மன்னிப்பு வாரியம் அவரது அசல் 12 ஆண்டு சிறைத்தண்டனையை பாதியாகக் குறைத்ததைத் தொடர்ந்து, அவர் காஜாங் சிறையில் ஆறு ஆண்டு குறைக்கப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்து வந்தார். அவரது ஆரம்பகால 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் 50 ரிங்கிட் மில்லியனாகக் குறைக்கப்பட்டது.

 

 

 

-fmt