மலேசியாவின் பன்மொழித் தன்மையை தேசிய ஒற்றுமைக்குத் தடையாகக் கருதாமல், நாட்டின் பகிரப்பட்ட அடையாளத்தை வலுப்படுத்தி, வாய்ப்புகளை விரிவுபடுத்தும் ஒரு தேசிய வளமாகக் கருத வேண்டும்.
எழுத்தாளரும் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகப் பாடுபடுபவருமான லீ சூ கிம் கூறுகையில், மலேசியர்கள் பல்வேறு மொழிகளுக்கு இடையில் இயல்பாக மாறிப் பேசும் திறன் — அதில் “மாங்லிஷ்” (Manglish) எனப்படும் முறைசாரா ஆங்கிலப் பேச்சுவழக்கும் அடங்கும் — நாட்டின் பல்வேறு சமூகங்களால் உருவான ஒரு பொதுவான அனுபவத்தைப் பிரதிபலிக்கிறது என்றார்.
அன்றாட உரையாடல்களில் மலேசியர்கள் அடிக்கடி மொழிகளை மாற்றிப் பேசுவதிலும், தங்களின் சொந்த பேச்சுவழக்குகளிலிருந்து சொற்கள், வெளிப்பாடுகள் மற்றும் உச்சரிப்பு முறைகளைச் சேர்த்துக் கொள்வதிலும் இது தெளிவாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“நமது தனித்துவமான பன்மொழிப் பேசும் திறனை நாம் இயல்பான ஒன்றாக எடுத்துக் கொள்கிறோம்… பல மொழிகளைப் பேசும் திறன் மற்றும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு எளிதாகவும் இயல்பாகவும் மாறும் ஆற்றல் நமக்கு உண்டு.”
“அப்போதுதான் நாம் நமது முறைசாரா ஆங்கிலப் பேச்சுவழக்கிற்கு மாறுகிறோம். அதில் நமது சொந்த மொழிகளின் கடன் சொற்கள், வெளிப்பாடுகள், ஒலிகள், இலக்கணம், மரபுத்தொடர்கள் மற்றும் உணர்ச்சிச் சொற்கள் நிறைந்திருக்கும். இது ‘மேங்லிஷ்’ என்ற மலேசியர்களின் சொந்த ஆங்கில வடிவமாக உருவெடுத்துள்ளது. இது அனைத்து மலேசியர்களாலும் பயன்படுத்தப்பட்டுப் புரிந்துகொள்ளப்படுகிறது; மேலும் நமது பகிர்ந்தளிக்கப்பட்ட தேசிய அடையாளத்தின் ஒரு அடையாளச் சின்னமாகவும் திகழ்கிறது,” என்று அவர் பெர்னாமாவிடம் சமீபத்தில் தெரிவித்தார்.
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் பெரானாகான் பாபா ந்யோன்யா சங்கத்தின்(Peranakan Baba Nyonya Association) நிறுவனத் தலைவருமான லீ(மேலே), உணர்ச்சிகள், கூடி இருக்கும் மனிதர்கள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மலேசியர்கள் மொழிகளுக்கு இடையே மாறுவது (Code-switching) சமூகத்தின் ஓர் இயல்பான அம்சம் என்றார்.
“இந்த மொழி மாற்றம் என்பது நமது ஒற்றுமையின் அன்றாட வெளிப்பாடு; ஆனால் அது திட்டமிட்டுச் செய்யப்படும் ஒன்று அல்ல,” என்று அவர் கூறினார்.
‘மேங்லிஷ்’ பகிர்ந்தளிக்கப்பட்ட அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது
1990-கள் முதல் சர்வதேச அளவில் ‘உலக ஆங்கிலங்களுக்கு’ (World Englishes) கிடைத்து வரும் அங்கீகாரம், மலேசியாவின் மொழிச் சூழலால் வடிவமைக்கப்பட்ட மேங்லிஷை ஒரு தனித்துவமான ஆங்கில வடிவமாக ஏற்றுக்கொள்ளப் பெரிதும் உதவியுள்ளது என்று லீ கூறினார்.
அவரது முதல் தொகுப்பான Manglish: Malaysian English at its Wackiest, 1998-இல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து 2019-இல் இரண்டாம் பதிப்பும், ஸ்டீபன் ஜே ஹாலுடன் இணைந்து எழுதிய மூன்றாம் பதிப்பு இந்த ஆண்டும் வெளியிடப்பட்டது.
“பல ஆண்டுகளாக, மேங்லிஷ் என்பது பிழைமிக்க ஆங்கிலமோ அல்லது மோசமான ஆங்கிலமோ அல்ல; அது நமது தனித்துவமான வடிவம் மற்றும் மலேசியர்களின் அன்பான அடையாளச் சின்னம் என்ற ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை அதிகரித்துள்ளது,” என்று அவர் கூறினார்.
மேங்லிஷ் சமூக மாற்றங்களுக்கு ஏற்ப தொடர்ந்து வளர்ந்து வருகிறது. காபி கடைகள் மற்றும் பணிபுரிகிற இடங்களைத் தாண்டி, சமூக ஊடக மீம்கள் (memes) வரை இது பரவியுள்ளது. சில பழைய வார்த்தைகள் மறைய, புதிய வெளிப்பாடுகள் இதில் இணைந்து வருகின்றன.
இருப்பினும், ஆங்கிலப் புலமை குறைவது, சமூக ஊடகங்களின் ஆதிக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி ஆகியவை மேங்லிஷின் படைப்பாற்றலுக்கும் வளம் சார்ந்த வெளிப்பாடுகளுக்கும் குறைவான வாய்ப்புகளையே வழங்கக்கூடும் என்று லீ எச்சரித்தார்.
இந்தப் பிரச்சனை மலேசியாவின் பரந்த மொழிப் பாரம்பரியத்திற்கும் நீள்கிறது. மலேசியாவில் 137 மொழிகளும், ஜோஹூரில் ஜாவானீஸ், தாப்பாவில் செமாய், கிளந்தான் மற்றும் பெர்லிஸில் தாய், பல நகரங்களில் போக்கியன் (Hokkien) போன்ற பல்வேறு பாரம்பரியங்களும், சபா மற்றும் சரவாக்கில் அழியும் நிலையிலுள்ள மொழிகளும் அடங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“மொழிகள் வெறும் தகவல்தொடர்பு சாதனங்கள் மட்டுமல்ல; அவை அறிவு மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள்,” என்று அவர் கூறினார்.
வெவ்வேறு மொழிகளில் புலமை பெறுவதை ஒன்றுக்கொன்று போட்டியாகப் பார்க்காமல், தங்களின் பன்மொழித் திறனை மலேசியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று லீ வலியுறுத்தினார்.
“மலேசியாவில் நாம் சிக்கலான, திறமையான மொழிப் பயனர்கள் என்பதற்கான தெளிவான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, நமது பன்முகத்தன்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு கொண்டாட வேண்டும். நாம் ஒரு தனித்துவமான இடத்தில் இருக்கிறோம்; இந்த நன்மையை நாம் கொண்டாடிப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று அவர் அழுத்தமாகக் கூறினார்.
மொழித் திறன்கள் அதிக வாய்ப்புகளைத் திறக்கின்றன
1991 முதல் ஆசியான் (Asean) பிராந்தியத்தில் பணியாற்றி, சன்வே பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிக் கல்வி மையத்தின் தலைவராக 16 ஆண்டுகள் பணியாற்றிய ஹால் கூறுகையில், இருமொழி மற்றும் பன்மொழித் திறன் மலேசிய சமூகத்தின் இயல்பான அம்சங்கள் என்றும், அவை நாட்டின் கலாச்சார பலத்தின் பகுதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
“மலேசியாவில் பன்மொழி அல்லது இருமொழித் திறன் என்பது ஒரு இயல்பான விஷயம். நமது தனித்துவமான பேச்சு வழக்கான ‘மேங்லிஷ்’ போலவே இதையும் நாம் கொண்டாட வேண்டும்,” என்றார்.
ஒரு மொழியில் புலமை பெறுவது மற்றொரு மொழியின் இழப்பில் வரக்கூடாது என்று ஹால் கூறினார்.
“தேசிய மொழியிலோ அல்லது சர்வதேச மொழியிலோ உள்ள திறன், ஒருவரது சமூக மொழியில் வெளிப்படுத்தப்படும் கலாச்சாரத்தால் குறைந்துவிடும் என்று நினைக்காமல், நமது ‘தாய்மொழிகள்’ மற்றும் கிளந்தானீஸ், போக்கியன் போன்ற வட்டார வழக்குகளில் உள்ள திறனை நாம் கொண்டாட வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஆங்கிலப் புலமையைப் பேணுதல், தேசிய மொழியை உயர்த்திப் பிடித்தல் மற்றும் செமாய், இபான், டசுன் போன்ற சமூக மொழிகளை ஆதரிப்பதன் மூலம் மலேசியாவின் பன்மொழி பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.
மலேசியாவின் 137 மொழிகளில் 70 சதவீதம் அழியும் நிலையில் இருப்பதாக ஹால் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பத் திறன்களை மலேசியா வலுப்படுத்தி வரும் வேளையில், மொழிப் புலமை பொருளாதார ரீதியாகவும் வாய்ப்புகளை விரிவாக்குகிறது என்று அவர் கூறினார்.
“மொழி தேசிய அளவிலும் உலக அளவிலும் வாய்ப்புகளுக்கான வழியை வழங்குகிறது. நான் முன்பு பணியாற்றிய கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி இன்றும் ஒரு சவாலாகவே உள்ளது. நாடு தொழில்நுட்ப ரீதியாக மேம்படும் போது, உலகளாவிய வர்த்தக மொழிகளில் சரளமாகப் பேசுவது அதிக தேர்வுகளை வழங்கி, சிறந்த வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது,” என்று அவர் கூறினார்.
அறிவை மீண்டும் மீண்டும் சொல்வதை விட, தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மேலானது.
கல்வி குறித்துப் பேசிய ஹால்(கீழே), அறிவை மனப்பாடம் செய்து சொல்வதை விட, மொழி கற்றல் மற்றும் தகவல்தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆசிரியர் மையம் கொண்ட ஒரு அமைப்பில் ஆசிரியர்களே முதன்மையாக இருக்கிறார்கள்; ஆனால் சிறிய வகுப்பறைகள் மற்றும் குறைந்த நிர்வாகச் சுமைகள் அவர்களின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்.
“கற்பிப்பதை விட மொழி கற்றலில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இன்னும் உள்ளது. 21ஆம் நூற்றாண்டின் அத்தியாவசிய திறமையான தகவல்தொடர்பு, அறிவை அப்படியே திரும்பச் சொல்வதை விட மேலானது,” என்று அவர் மேலும் கூறினார்.
மலேசிய அடையாளம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக தேசிய மொழியை வளர்க்கும் அதே வேளையில், சர்வதேச வர்த்தக மொழிகளுடனான மலேசியாவின் நீண்டகால தொடர்பையும் மொழி கல்வி அங்கீகரிக்க வேண்டும் என்று ஹால் கூறினார்.
ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் சரளமாகப் பேசுவது, மலாய் அல்லது பிற சமூக மொழிகளின் மதிப்பைக் குறைக்காமல், மலேசியாவின் உலகளாவிய வர்த்தக நிலைக்குப் பொருத்தமானதாகவே இருக்கிறது என்றார்.
“கல்வியானது ஆங்கிலம், மலாய், மாண்டரின், தமிழ் மற்றும் சமூக மொழிகளுக்கு இடையே இருமொழி மற்றும் பன்மொழித் திறனைச் சமநிலைப்படுத்த வேண்டும்.”
50-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் பல புத்தகங்களை எழுதியுள்ள ஹாலின் கல்வி வெளியீடுகள், ஆசியான், சிந்தனைமிக்க ஆசிரியர் கல்வி, கலப்பு கற்றல் (blended learning) ஆகியவை குறித்து விரிவாகப் பேசுகின்றன.
AI யுகத்தில் பன்மொழித் திறன்
இணையவழி உள்ளடக்கங்களை விமர்சனமின்றிப் பயன்படுத்துவதற்கு எதிராகவும் ஹால் எச்சரித்தார். வழிமுறைகள் (algorithms) தவறான எண்ணங்களை வலுப்படுத்தக்கூடும் என்றும், கிளிக்பைட் (clickbait) மற்றும் பகிரப்படும் செய்திகள் மூலம் பொய்கள் பரவுகின்றன என்றும் கூறினார்.
குறைந்து வரும் எழுத்துத் தரத்தைப் பற்றி கவலை தெரிவித்த அவர், AI-ன் எழுச்சியைக் குறிப்பிட்டு, பன்மொழி வளங்கள் அசலான சிந்தனைக்கும் வெளிப்பாட்டிற்கும் ஒரு அடித்தளத்தை வழங்க முடியும் என்றார்.
“பயன்படுத்துவதற்குச் சொந்தமாகப் பன்மொழி வார்த்தை வங்கி வைத்திருப்பது படைப்பாற்றலுக்கான அடித்தளத்தை வழங்கும். இந்த ‘காப்பி-பேஸ்ட்’ யுகத்தில் இது மிகவும் முக்கியமானது. AI உள்ளடக்கங்களின் கடலில் நாம் விமர்சனப் பார்வையுடன் கூடிய பார்வையாளர்களாக இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.
லீயைப் பொறுத்தவரை, மலேசியாவின் பன்மொழித் தன்மை என்பது மக்கள் அன்றாட வாழ்க்கையில் தொடர்புகொள்வதிலும் மொழிகளுக்கு இடையே மாறுவதிலும் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது.
கல்வியின் மூலம் அந்தத் திறனை எவ்வாறு தக்கவைத்துக்கொள்வது என்பதும், தேசிய அளவிலும் உலக அளவிலும் பங்கேற்க மலேசியர்களுக்குத் தேவையான மொழித் திறன்களை உறுதி செய்வதுமே ஹாலின் கவலையாகும்.
சுருக்கமாகச் சொன்னால், மலேசியாவின் மொழிப் பன்முகத்தன்மை மக்களைப் பிரிக்க வேண்டிய அவசியமில்லை என்று வல்லுநர்கள் கூறினர். ஒரு பொதுவான தேசிய அடையாளத்துடன் அதை வளர்க்கும்போது, அது சமூகங்களுக்கு இடையிலான பாலமாகவும், கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார பலத்தின் ஆதாரமாகவும் செயல்படும்.























