திரெங்கானு தேர்தல் கோரிக்கையைத் தொடர்ந்து அம்நோவின் நேர்மை குறித்து சனுசி கேள்வி

திரெங்கானுவில் திடீர் தேர்தல் நடத்த வேண்டும் என்று அம்னோ துணைத் தலைவர் முகமட் ஹசான் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, மலாய் அரசியல் ஒற்றுமையை ஏற்படுத்துவதில் அம்னோவின் நேர்மை குறித்து பாஸ்  தேர்தல் இயக்குனர் சனுசி நோர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

மலாய் ஒற்றுமைக்கான நிகழ்ச்சி நிரலில் இஸ்லாமியக் கட்சியான பாஸ்-இன் நேர்மையை சோதிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய சனுசி, ஜோகூர் அல்லது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் அம்னோ தனது எந்தவொரு தொகுதியையும் பாஸ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

அம்னோவின் “நேர்மை” என்பது இதுவரை வெறும் வாக்கு பரிமாற்றத்தை சாத்தியமாக்குவதற்கும், தற்போது தங்களின் வசம் இருக்கும் தொகுதிகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் மட்டுமேயானது என்று பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான சனுசி கூறியதாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் தேர்தல்களில் அம்னோவின் எந்தத் தொகுதிகள் பாஸ் கட்சிக்குக் கொடுக்கப்பட்டன? அல்லது மலாக்காவில் எந்த அம்னோ தொகுதிகள் நமக்குக் கொடுக்கப்படப் போகின்றன?

அம்னோவின் நேர்மை என்பது இதுவரை தங்களிடம் உள்ளதைத் தற்காத்துக் கொள்வது மட்டுமேயாகும். பின்னர், பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள தொகுதிகள் போன்ற தாங்கள் இதுவரை கைப்பற்றாத தொகுதிகளுக்காக அவர்கள் போராடுகிறார்கள், என்று சனுசி கூறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

டோக் மாட் என்று அழைக்கப்படும் முகமட், மலாய் ஒற்றுமையில் இஸ்லாமியக் கட்சியான பாஸ்-இன் நேர்மையை நிரூபிக்கும் வகையில், பாஸ் தலைமையிலான திரெங்கானுவில் திடீர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தார்.

திரெங்கானுவில் உள்ள தொகுதிப் பங்கீட்டிற்கான ஒரு சூத்திரத்தை அம்னோவும் பாஸ் கட்சியும் ஒப்புக் கொள்ள முடிந்தால், அதேபோன்றதொரு அணுகுமுறையை அடுத்த பொதுத்தேர்தலிலும் பின்பற்றலாம் என்று முகமட் கூறினார்.

2023-ஆம் ஆண்டு நடைபெற்ற திரெங்கானு மாநிலத் தேர்தலில், அம்னோ போட்டியிட்ட 27 தொகுதிகளிலும் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாமல் முற்றிலுமாகத் துடைத்தெறியப்பட்டது.

மறுபுறம், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அங்குள்ள அனைத்து 32 தொகுதிகளையும் கைப்பற்றி முழுமையான வெற்றியைப் பதிவு செய்தது. இதில் பாஸ் 27 இடங்களையும், பெர்சத்து ஐந்து இடங்களையும் வென்றன. இதன் மூலம் திரெங்கானு வரலாற்றிலேயே முதல் முறையாக எதிர்க்கட்சி இல்லாத ஒரு மாநிலமாக மாறியது.

அரசியல் கூட்டுறவின் நேர்மையை அளவிடுவதற்கான ஒரு சோதனைக் களமாகவோ அல்லது கருவியாகவோ தேர்தல்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறி, முகமட்டின் இந்த அழைப்பை பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் நிராகரித்துள்ளார்.

திரெங்கானு அரசாங்கம் நிலையானதாகவும் சிறப்பாகவும் செயல்பட்டு வருவதால், அங்கு திடீர் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் கூறினார்.

 

 

 

 

-fmt