ஹெலிகாப்டர் விபத்து: ராஜினாமா செய்வது நீண்டகாலமாக நிலவி வரும் அமைப்புசார் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது – செனட்டர்

பறக்கும் மருத்துவ சேவை (Flying Doctor Service)

லாங் லெல்லாங் (Long Lellang) ஹெலிகாப்டர் விபத்தில் ஐந்து மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கேப்லி அஹ்மத் (Dzulkefly Ahmad) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை செனட்டர் டாக்டர் ஆர். லிங்கேஸ்வரன் நிராகரித்துள்ளார். அமைச்சர் பதவி விலகுவது நாட்டின் சுகாதார அமைப்பில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரச் செய்தி இணையதளமான CodeBlue, விபத்தைத் தொடர்ந்து சுல்கேப்லி அஹ்மத் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வருவதாக நேற்று செய்தி வெளியிட்டது. இந்த விபத்தில் ஐந்து மருத்துவப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

ஒரு அறிக்கையில், பறக்கும் மருத்துவ சேவை (FDS), மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை, கொடுப்பனவுகள் மற்றும் பிற குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நிலவி வருவதாகவும், சில பிரச்சினைகள் பல தசாப்தங்களாகவே இருந்து வருவதாக லிங்கேஸ்வரன் கூறினார்.

FDS-க்குப் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டர்களின் பாதுகாப்பு குறித்து தாம் ஏற்கனவே கவலைகளை எழுப்பியிருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகளைத் தொடர்ந்து, சரவாக்கில் FDS தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

FDS பணியாளர்களுக்கான கொடுப்பனவு குறித்து, தற்போது ரிம 30-லிருந்து ரிம 60 ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ள தொகை போதுமானதல்ல என்று லிங்கேஸ்வரன் கூறினார். பணியாளர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் மற்றும் அவர்களுடைய பொறுப்புகளை கருத்தில் கொண்டு, ரிம 110 கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்று அவர் முன்மொழிந்தார்.

மேலும், சுகாதார சேவைகள் ஆணையம் (Health Services Commission) ஒன்றை அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.