மலேசியா–இந்தோனேசியா போதைப்பொருள் கடத்தல் விசாரணை விரிவடையும் நிலையில், மேலும் ஒரு விமானி கைது

ஜகார்த்தாவில் ரிம 45 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் மலேசிய துணை விமானி ஒருவர் கைது செய்யப்பட்டதை அடுத்து, தீவிரமாக நடைபெற்று வரும் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான விசாரணையில், காவல் துறையினர் மற்றொரு விமானியைக் கைது செய்துள்ளனர்.

30 வயதில் இருக்கும் இந்த புதிய சந்தேக நபர், இரண்டு நாட்களுக்கு முன்பு கிள்ளான் பள்ளத்தாக்கில் (Klang Valley) கைது செய்யப்பட்டார். இவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட துணை விமானி பணிபுரியும் நிறுவனத்திலிருந்து வேறுபட்ட மற்றொரு விமான நிறுவனத்தில் பணியாற்றுபவர் ஆவார்.

இந்தக் கும்பலின் பணப் பரிவர்த்தனைகளைக் கையாள்வதில் இந்த இரண்டாவது விமானிக்குத் தொடர்பு இருப்பதாகக் நம்பப்படுவதாக போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையின் (NCID) இயக்குநர் உசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

இரண்டாவது விமானி, போதைப்பொருள் கும்பலுக்கும் முதல் துணை விமானிக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருக்கு நடத்தப்பட்ட போதைப்பொருள் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ (அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை) என முடிவுகள் வந்துள்ளன. இந்த கைதுடன் சேர்த்து இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது,” என்று செய்தியாளர்களிடம் உசேன் கூறினார்.

இதுவரை 7 பேர் கைது

ஆகஸ்ட் 11 முதல் 15 வரை ஜகார்த்தா சென்ற NCID அதிகாரிகள், அங்கு கைது செய்யப்பட்ட முதல் விமானியிடம் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இதற்கு முன்னர் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் விநியோகஸ்தர்களாகவும், தூதர்களாகவும் (couriers) செயல்பட்டு, முதல் விமானியிடம் போதைப்பொருட்களை விநியோகித்ததாக நம்பப்படுகிறது.

மலேசியாவின் ‘மலேசியா ஏர்லைன்ஸ்’ MH727 விமானத்தின் மூலம் கோலாலம்பூரிலிருந்து ஜகார்த்தா சென்ற 39 வயதான மலேசிய துணை விமானியை, ஆகஸ்ட் 16 அன்று சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்தே இந்த விசாரணை தொடங்கியது.

அவரது பயணப் பையிலிருந்து (luggage) சுமார் 25 கிலோ எடையுள்ள 70,114 எக்ஸ்டசி (ecstasy) மாத்திரைகள் அடங்கிய 14 பொட்டலங்களை காவல் துறையினர் கண்டெடுத்தனர். மேலும், அவரது கைப்பை மூலம் 4 கிராம் மெத்தம்பேட்டமைன் (methamphetamine) பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த போதைப்பொருட்களின் சந்தை மதிப்பு சுமார் ரிம 45 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் பொட்டலங்களை ஜகார்த்தாவிற்கு கொண்டு செல்வதற்காக அந்த துணை விமானிக்கு ரிம 50,000 சன்மானம் பேசப்பட்டதாகவும், அங்குள்ள ஒரு ஹோட்டலில் வேறொரு நபர் அதை பெற்றுக்கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும் இந்தோனேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.