சிரம்பான், கார்டன் ஹோம்ஸ் பகுதியில் நேற்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நபர், நீண்ட காலமாக போதைப்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஒரு போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்று புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அந்த நபர் போலீஸ் அதிகாரிகளை நோக்கி பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகவும், அதற்குப் பதிலடியாக போலீசார் திருப்பிச் சுட்டதாகவும் புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசைன் உமர் கான் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்ட அந்த 52 வயது நபர், 1990-களிலிருந்து போதைப்பொருள் தயாரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது சோதனையில் தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். மேலும், அவர் மீது கடத்தல் உள்ளிட்ட போதைப்பொருள் மற்றும் இதர குற்றவியல் வழக்குகள் அடங்கிய குற்றப் பின்னணி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தச் சந்தேக நபர் ஒரு கடத்தல் கும்பலின் தலைவன் என்றும், போதைப்பொருள் தயாரிப்பதில் அதிக அனுபவம் வாய்ந்தவர்.
அந்த வீடு எஸ்டிஎம்ஏ போதைப்பொருளைத் தயாரிக்கும் ஒரு ஆய்வகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாக ஹுசைன் கூறினார். அங்கிருந்து மொத்தம் 2.75 கோடி ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களையும், ஒரு ரிவோல்வர் ரக துப்பாக்கியையும், போதைப்பொருள் தயாரிப்பதற்கான பல்வேறு உபகரணங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
செரம்பானிலும், கோலாலம்பூர் குச்சாய் லாமாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலும் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு சோதனைகளில், இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என மேலும் இரண்டு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 32 வயது பெண்ணுக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதோடு, அதில் ஆறு வழக்குகள் போதைப்பொருளுடன் தொடர்புடையவை என்று ஹுசைன் தெரிவித்தார். அதேபோல், 34 வயது ஆணுக்கும் குற்றப் பின்னணி உள்ளதுடன், அவற்றுள் எட்டு வழக்குகள் போதைப்பொருள் தொடர்பானவை என்றும் கூறினார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வந்த இந்தக் கும்பல், போலீசாரின் பார்வையில் படாமல் தப்பிப்பதற்காக அதிக மக்கள் நடமாட்டம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் தங்களது சட்டவிரோதத் தொழிலைத் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட அந்த ஆணும் பெண்ணும் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்குக் காவலில் (Remand) வைக்கப்பட்டுள்ளதாக ஹுசைன் கூறினார்.
கொலை முயற்சி குற்றத்திற்காக குற்றவியல் சட்டத்தின் 307-வது பிரிவின் கீழும், போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 39பி (39B) பிரிவின் கீழும் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
-fmt
























