சபாவில் நிலவும் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்கு சுகாதார அமைச்சு பல உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சுல்கிப்லி அகமத் தெரிவித்துள்ளார்.
கோத்தா மாருடு மற்றும் பியூஃபோர்ட் போன்ற நகரங்களில் உள்ள பல மருத்துவமனைகளில் நிரந்தர மருத்துவ நிபுணர்களை நியமிப்பதில் இருந்து இந்த நடவடிக்கை தொடங்கும் என்று பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிராமப்புறப் பகுதிகளில் மருத்துவ நிபுணர்களின் சுழற்சிமுறைப் பணியை மாற்றுவதற்கான அமைச்சின் முயற்சிக்கு இந்த நடவடிக்கை மேலும் வலுசேர்க்கும் என்றும் அவர் கூறினார்.
சந்தகான் மற்றும் தாவாவ் மருத்துவக் குழுமங்களை கோத்தா கினபாலுவுக்கு இணையான நிலைக்கு மேம்படுத்துவதன் மூலம், சபாவில் உள்ள மருத்துவ நிபுணத்துவ இடைவெளியைக் குறைப்பதே அமைச்சின் மூன்று முதல் ஐந்து ஆண்டுகால இலக்காகும். இதில் இருதய மற்றும் மார்பக அறுவை சிகிச்சை சேவைகளும் அடங்கும், என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் பயிற்சி நிறுவனத்தில் படித்துப் பட்டம் பெற்ற சபா மக்கள், இப்போது தன்னாட்சி வேலைவாய்ப்பு அதிகாரம் மூலம் நிரந்தரப் பணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து 15% SSPA சம்பளச் சீரமைப்பு, நிரந்தரப் பணிக்கு மாறும் அதிகாரிகளுக்கான முழு இடமாற்றக் கொடுப்பனவு ஒப்புதல் மற்றும் ETAP ஊக்கத்தொகை மறுஆய்வு ஆகியவையும் வழங்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.
இதுதவிர, லஹாட் டத்து, பியூஃபோர்ட் மற்றும் கோத்தா மாருடு ஆகிய பகுதிகளில் உள்ள பணியாளர் குடியிருப்புக்களை மேம்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகள், கூட்டரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
சுல்கிப்லி அகமத் கூறுகையில், அரசு மருத்துவமனை முகப்புகள் மற்றும் வார்டுகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்காக, சுகாதார அமைச்சு ‘தனியார் துறைக்கு மருத்துவமனை சேவைகளை அவுட்சோர்சிங் செய்யும் திட்டத்தை’ தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
நோயாளி நிலுவைகளை தீர்க்கவும், காத்திருப்பு நேரத்தை பெருமளவில் குறைக்கவும் இந்தத் திட்டம் டயாலிசிஸ் சிகிச்சை, கண்டறியும் ஸ்கேன்கள் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியிலான அறுவை சிகிச்சை பணிகள் உட்பட 15 முக்கியமான சேவைகளுக்கு விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்.
சபாவில் கிடைக்கக்கூடிய ஒவ்வொரு மருத்துவ வசதியையும் முழுமையாகப் பயன்படுத்துவதற்காக, மலேசியா சபா பல்கலைக்கழக மருத்துவமனையுடன் மேற்கொள்ளப்படும் மூலோபாய ஒத்துழைப்பின் மூலம் இந்நடவடிக்கை மேலும் நெறிப்படுத்தப்படுகிறது, என்றும் அவர் கூறினார்.
-fmt
























