62 வயதான அந்த நபர், தனது பயணப் பெட்டியின் போலியான அடிப்பகுதிக்குக் கீழே போதைப்பொருட்களை மறைத்து வைத்து இந்தியாவுக்குள் நுழைய முயன்றபோது பிடிபட்டார்.
ஆகஸ்ட் 31 அன்று மலேசிய நபரின் பயணப் பெட்டியின் போலியான அடிப்பகுதியின் கீழ் கண்டெடுக்கப்பட்ட கஞ்சா பொட்டலங்கள்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் (ரிம 520,000) மதிப்புள்ள 3.45 கிலோ உயர்தர ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாகக் கூறப்படும் 62 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று வெளியிட்ட அறிக்கையில், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள், ஆகஸ்ட் 31ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த அந்த நபரை விமான நிலையத்தின் விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தடுத்து விசாரித்ததாகத் தெரிவித்தனர்.
சுங்கத்துறையிடம் எந்தப் பொருட்களையும் அறிவிக்காமல் விமான நிலையத்தின் “Green Channel” வழியாக வெளியேற முயன்றபோது அவர் பிடிபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது செக்-இன் பயணப் பொதியை விரிவாகச் சோதனையிட்டபோது, அதன் அடிப்பகுதியில் போலியான தளம் அமைக்கப்பட்டு, அதற்குக் கீழே நான்கு வெளிப்படையான, காற்றுப்புகாத பொதிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பொதிகளில் மொத்தம் 3,452 கிராம் எடையுள்ள உலர்ந்த பச்சை கலந்த பழுப்பு நிற தாவரப் பொருட்கள் இருந்தன. அவை கஞ்சா என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
சென்னை சுங்கத்துறை, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் இந்தியாவின் 1985ஆம் ஆண்டு போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றும் பொருட்கள் சட்டத்தின் (Narcotic Drugs and Psychotropic Substances Act) கீழ் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவித்தது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தக் கடத்தலுக்குப் பின்னால் செயல்படும் பெரிய கடத்தல் வலையமைப்புகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்த முயன்றதாக மலேசியப் பிரஜை ஒருவர் சிக்கியிருக்கும் இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
ஆகஸ்ட் 8ஆம் தேதி, பேராக்கைச் சேர்ந்த 54 வயதுடைய மலேசிய ஆடவர் ஒருவர் அதே விமான நிலையத்தில் 4.03 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். அவர் பெங்காக்கில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்திருந்தார்.
அந்தச் சம்பவத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் தாய்லாந்தில் இருந்து பெறப்பட்டதாக நம்பப்படுவதாக புக்கிட் அமான் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
























