“பயணிகளை ஏற்றிச் செல்ல இரு படகுகளில் ஏதேனும் ஒன்றுக்கு செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இருந்ததா என்பதை அதிகாரிகள் இதுவரை உறுதிப்படுத்தவில்லை,” என்று ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாத் தெரிவித்துள்ளார்.
நேற்று மெர்சிங் துறைமுகத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீட்புப் பணியாளர்கள் உதவி செய்தனர்.
மெர்சிங் ஆற்றின் முகத்துவாரத்திற்கு அருகே நேற்று உயிரிழப்பை ஏற்படுத்திய மோதலில் சிக்கிய இரண்டு பயணிகள் படகுகளின் அனுமதிகள் மற்றும் உரிமங்களைக் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
படகு இயக்குநர்கள் நடைமுறையில் உள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினார்களா என்பதையும் விசாரித்து வருவதாக ஜொகூர் மாநில காவல்துறைத் தலைவர் அப்துல் ரஹ்மான் அர்சாட் தெரிவித்தார் என்று சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
இன்று கம்போங் பெங்காலான் பத்து படகுத்துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இரண்டு படகுகளில் ஏதேனும் ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்லுவதற்கான செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் பெற்றிருந்ததா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, இந்த மோதல் இரவு சுமார் 8.15 மணியளவில், சுங்கை மெர்சிங் படகுத்துறையிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
ஆறு பேருடன் சென்ற Sea Queen( சீ குயின்) என்ற படகு, மூன்று பேர் பயணித்த Rawa Birds (ராவா பேர்ட்ஸ்) என்ற படகுடன் மோதியது. இந்த விபத்தில் Sea Queen படகின் 38 வயதான ஓட்டுநரும், 32 வயதான பயணி ஒருவரும் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மெர்சிங் மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை மற்றும் பாசிர் குடாங் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ரஹ்மான் தெரிவித்தார்.
அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்திய குற்றத்திற்கான குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304A மற்றும் கப்பலை ஆபத்தான முறையில் இயக்கியதற்கான பிரிவு 280 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. தற்போது இது “திடீர் மரணம்” (sudden death) வழக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Merchant Shipping Ordinance 1952-ஐ மீறியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து விசாரிக்க கடல்சார் துறையின் உதவியை காவல்துறையினர் நாடவுள்ளதாகவும், மோதல் தொடர்பான ஆதாரங்களை ஆய்வு செய்ய வேதியியல் துறையின் உதவியும் பெறப்படும் என்றும் ரஹ்மான் தெரிவித்தார்.
























