நிதி அமைச்சகம் கூறுகையில், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள், வலுவான பொருளாதாரம் மற்றும் அரசாங்கத்தின் நிதித் திறன் ஆகியவையும் இந்த முடிவுக்கு பங்களித்துள்ளன.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், BUDI Madani திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர எரிபொருள் மானிய ஒதுக்கீடு நாளை முதல் மீண்டும் 300 லிட்டராக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
BUDI Madani எரிபொருள் மானிய ஒதுக்கீடு மீண்டும் அதிகரிப்பு
சிறந்த எரிபொருள் விநியோக மேலாண்மை உள்ளிட்ட பல காரணிகளை கருத்தில் கொண்டே, BUDI Madani திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர எரிபொருள் மானிய ஒதுக்கீட்டை நாளை முதல் மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
BUDI95 மற்றும் BUDI Diesel பயனாளர்களுக்கான மாதாந்திர ஒதுக்கீட்டை 200 லிட்டரில் இருந்து 300 லிட்டராக உயர்த்துவதற்கான முடிவில், கடுமையான அமலாக்க நடவடிக்கைகள், வலுவான பொருளாதார செயல்திறன் மற்றும் அரசாங்கத்தின் நிதித் திறன் ஆகியவையும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்தது.
தினசரி தேவைகளுக்காக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியவர்கள் மற்றும் வாகனங்களை நம்பி வாழ்வாதாரம் நடத்தும் சிறு வியாபாரிகளின் தேவைகளும் இந்த முடிவில் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
“தகுதியுள்ள மலேசியர்களுக்கு மட்டுமே எரிபொருள் மானியங்கள் சென்றடைவதை மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும். அதே நேரத்தில், மானிய கசிவு, கடத்தல் மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்படும்,” என்று அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதலுடன் தொடர்புடைய உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளுக்கு மத்தியில், அரசாங்கம் ஏப்ரல் 1 முதல் BUDI95-ன் மாதாந்திர ஒதுக்கீட்டை தற்காலிகமாக 300 லிட்டரில் இருந்து 200 லிட்டராகக் குறைத்திருந்தது.
நிதி அமைச்சகத்தின் கூற்றுப்படி, 1.6 கோடி பயனாளர்கள் ஒரு லிட்டர் ரிம 1.99 என்ற மானிய விலையில் RON95 பெட்ரோலைப் பெறுகின்றனர். இவர்களில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் மானிய விலையில் ஒரு லிட்டர் ரிம 2.10 என்ற விலையில் டீசலையும் பெறத் தகுதியுடையவர்கள்.
மேலும், தகுதியுள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான தனியார் டீசல் வாகன உரிமையாளர்கள், குறிப்பாக பிக்கப் டிரக்குகள் மற்றும் ஜீப்களின் உரிமையாளர்கள், மாதத்திற்கு கூடுதலாக 100 லிட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அவர்களின் மொத்த மாதாந்திர ஒதுக்கீடு 400 லிட்டராக உயரும்.
கூடுதல் 100 லிட்டர் ஒதுக்கீட்டிற்கு இதுவரை விண்ணப்பிக்காத தகுதியுள்ள பிக்கப் டிரக்குகள் மற்றும்ஜீப் உரிமையாளர்கள், BUDI Madani இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
“கூடுதல் 100 லிட்டர் ஒதுக்கீட்டிற்கு ஏற்கனவே அனுமதி பெற்ற பிக்கப் டிரக்குகள் மற்றும் ஜீப்களின் உரிமையாளர்களுக்கு, செப்டம்பர் 1 முதல் அவர்களின் மாதாந்திர ஒதுக்கீடு தானாகவே 400 லிட்டராக மாற்றப்படும்,” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
























