ரெடாட்ரூடைடு அல்லது “ரெட்டா” என்ற மூலப்பொருளைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.
மலேசியாவில் பயன்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரை ரெடாட்ரூடைடு அடங்கிய எந்தவொரு தயாரிப்பும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்படவில்லை.
ரெடாட்ரூடைடு, ‘ரெட்டா’ அல்லது அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து பெறப்படும் உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகளை பொதுமக்கள் வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது, என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முறையான மருத்துவப் பரிசோதனை மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய தயாரிப்புகள் அல்லது மருந்துகளைப் பயன்படுத்துவது பக்கவிளைவுகளையும் கடுமையான பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடும்.
ரெடாட்ரூடைடு என்பது தற்போது மூன்றாம் கட்ட மருத்துவப் பரிசோதனையில் இருக்கும் ஒரு ஆராய்ச்சி மருந்து என்றும், உலகளவில் எந்தவொரு ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்தும் இது இன்னும் சந்தைப்படுத்துதலுக்கான அனுமதியைப் பெறவில்லை.
மேலும், நடப்பு ஆண்டில் இதுவரை இ-காமர்ஸ் இணையதளங்களில் இருந்து, ரெடாட்ரூடைடு கொண்டிருப்பதாகக் கூறப்படும் தயாரிப்புகள் உட்பட உடல் எடைக் குறைப்பு தயாரிப்புகள் தொடர்பான 209 விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.
‘கூடுதலாக, பல்வேறு ஊடகங்களில் வந்த 1,243 விளம்பரங்கள் கண்டறியப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கு எதிராக தகுந்த அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தேசிய மருந்து ஒழுங்குமுறை முகமையின் தயாரிப்பு தேடல் அம்சத்தின் மூலம் மருத்துவ தயாரிப்புகளின் பதிவு நிலையை சரிபார்க்குமாறு அது பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
ஃபார்மாடேக் ஹோலோகிராம்களின் நம்பகத்தன்மையை MyUBAT செயலியில் மூலம் சரிபார்க்கலாம் என்றும் அது கூறியுள்ளது.
மேலும், விளம்பரங்கள், வாடிக்கையாளர் சான்றுகள், அதிவேக மற்றும் கடுமையான உடல் எடை இழப்புக்கான வாக்குறுதிகள் அல்லது வழக்கத்திற்கு மாறான குறைந்த விலைகளைக் கண்டு பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் என்றும் அமைச்சகம் எச்சரித்துள்ளது.
-fmt
























