இன்று மாலை 7.25 மணிக்குப் புறப்படத் திட்டமிடப்பட்டிருந்த OD701 விமானம், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த விமானம் கிங் அப்துல்அஜீஸ் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டியதாகும்
பயணிகள் மற்றும் விமானக் குழுவினரின் பாதுகாப்பும் நலனும் தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை என்று பாதிக் ஏர் (Batik Air) தெரிவித்துள்ளது
சவூதி அரேபியாவின் ரியாத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்ததாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு சவூதி அரேபியாவுக்கான தனது திட்டமிடப்பட்ட விமானச் சேவையை பாதிக் ஏர் நிறுவனம் ரத்து செய்துள்ளது.
இரவு 7.25 மணிக்கு கிங் அப்துல்அஜீஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு (JED) புறப்படவிருந்த OD701 விமானம், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக” ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களின் பாதுகாப்பே தங்களின் மிக உயர்ந்த முன்னுரிமை என்று பாதிக் ஏர் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், விமான நிறுவனம் மேலும் தெரிவித்ததாவது:
நிலைமையின் முன்னேற்றங்களை பாதிக் ஏர் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விமானச் சேவைகளில் ஏற்படக்கூடிய தாக்கத்தை மதிப்பிடுவதற்காக, சம்பந்தப்பட்ட விமானப் போக்குவரத்து அதிகாரிகள், விமான நிலைய இயக்குநர்கள் மற்றும் பிற தொடர்புடைய தரப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது.
“சமீபத்திய தகவல்கள் மற்றும் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் அடிப்படையில், நிலைமையைத் தொடர்ந்து மதிப்பாய்வு செய்து, விமானச் செயல்பாடுகள் தொடர்பான முடிவுகளை நிறுவனம் எடுக்கும்,” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பயணிகள் அடுத்ததாகக் கிடைக்கும் விமானத்தில் பயணிக்க மறுஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாற்றங்கள் குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் பாதிக் ஏர் தெரிவித்துள்ளது.
மேலும், விமானச் சேவைகள் தொடர்பான சமீபத்திய தகவல்களை அறிந்துகொள்ள, பாதிக் ஏர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து பார்வையிடுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமையன்று, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களால் ரியாத் சர்வதேச விமான நிலையம் ஒரு வாரத்திற்குள் மூன்றாவது முறையாகத் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், விமான நிலையத்தின் தரைப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சவூதி அரேபியாவின் வணிக விமானம் ஒன்றும் பெரும் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரியாத் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, சவூதி அரேபியாவுக்குச் செல்லவிருந்த சில விமானங்கள் மதீனா விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டதாக, சமூக ஊடகப் பயனர்களை மேற்கோள் காட்டி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இன்று முன்னதாகச் செய்தி வெளியிட்டுள்ளது.























