அன்வார்: விமானப்படையின் போதைப்பொருள் கடத்தல் விவகாரம் நாட்டுக்குச் செய்யப்பட்ட துரோகம்

போதைப்பொருட்களைக் கடத்துவதற்காக மலேசிய ராயல் விமானப்படைக்குச் (Royal Malaysian Air Force ) சொந்தமான விமானம் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை, தேசியப் பாதுகாப்புக்கு எதிரான கடுமையான மீறல் என்றும் நாட்டுக்குச் செய்யப்படும் துரோகம் என்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார். இத்தகைய செயல்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளப்பட மாட்டாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

வணிக விமானங்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்பட்ட சம்பவங்கள் ஏற்கெனவே அம்பலமானதைத் தொடர்ந்து, எல்லைப் பாதுகாப்பு மீறல்கள் மற்றும் அரசாங்கத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவது ஆகியவை இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய விவகாரங்களாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.

பல தசாப்தங்களாக ஆழமாக வேரூன்றி, முறையான கட்டமைப்புடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை அரசாங்கம் மிகக் கடுமையான அச்சுறுத்தலாகக் கருதுவதாகவும், இனியும் இதனைத் தனிப்பட்ட சம்பவமாகக் கருத முடியாது என்றும் அன்வார் கூறினார்.

“நமது நாட்டின் தற்காப்புச் சொத்துகள் பொறுப்பற்ற சில தனிநபர்களால் எவ்வாறு சமரசம் செய்யப்பட்டு, ஊடுருவலுக்கு உள்ளாக அனுமதிக்க முடியும்? இது நாட்டுக்குச் செய்யப்படும் துரோகமாகும். இதனால் ஏற்படக்கூடிய ஆபத்து மிகப் பெரியது,” என்று இன்று சிலாங்கூர், பண்டார் பாரு அம்பாங் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார், உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியோன் இஸ்மாயில் மற்றும் தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கடுமையான கண்காணிப்பு மற்றும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தமக்கு உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.

மேலும், காவல்துறையின் தொடர்புடைய பிரிவுகள், தற்காப்பு அமைச்சு, மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமை (AKPS), சுங்கத் துறை உள்ளிட்ட அமலாக்க அமைப்புகளுக்கு இந்த விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மெத்தம்பெட்டமைன் (Methamphetamine) எனப்படும் போதைப்பொருள்

இது பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. சில தரப்பினரின் கூட்டு ஒத்துழைப்புடன், சில நேரங்களில் இது தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டது. இதனால் சிலரிடையே ஏற்பட்டுள்ள அதிருப்திக்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

“நான் இந்தப் பதவியில் இருக்கும் வரையிலும், இந்தப் பொறுப்பையும் நம்பிக்கையையும் சுமந்திருக்கும் வரையிலும், இத்தகைய செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்றார் அவர்.

அண்மைய ஆண்டுகளில் அரசாங்கம் அதிக எண்ணிக்கையிலான அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தாலும், கசிவுகளும் முறைகேடுகளும் தொடர்ந்து நீடிப்பதாக அன்வார் கூறினார்.

இத்தகைய நடைமுறைகளை முற்றாக ஒழிப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை எடுக்க அமைச்சரவை ஒருமனதாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 17ஆம் தேதி, ராயல் மலேசிய விமானப்படையின் சொத்துகளைப் பயன்படுத்தி போதைப்பொருள் கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் விவகாரம் தொடர்பாக, கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் லாபுவான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் விமானப்படையைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆறு பேர் பொதுமக்களாவர்.

இந்த நடவடிக்கைகளின்போது, சுமார் 48.3 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 96.64 கிலோகிராம் எடையுடைய ஷாபு (மெத்தம்பெட்டமைன்) எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளும், 6.98 கிலோகிராம் எடையுடைய இரசாயனப் பொருட்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.