நியூயோர்க் காவல்துறை (NYPD) அதிகாரிகள் போல் வேடமிட்டு மோசடியில் ஈடுபட்ட கும்பலைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பணமோசடி போன்ற குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, குற்றக் கும்பல் அவர்களை ஏமாற்றியதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோலாலம்பூரில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, பறிமுதல் செய்யப்பட்ட நியூயார்க் காவல் துறையின் (NYPD) சீருடையை டாங் வாங்கி மாவட்டப் காவல்துறைத் தலைவர் அஹ்மத் அஸ்வான் அமின் நோர்டின் (நடுவில்) காண்பிக்கிறார்.

கோலாலம்பூர், புக்கிட் சிலோன் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றிலிருந்து செயல்பட்டு வந்த சர்வதேச இணைய மோசடிக் கும்பலைக் காவல்துறையினர் முறியடித்துள்ளனர். இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் நியூயார்க் காவல்துறை (NYPD) அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த ஆண்டின் மத்தியில் இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் இந்தக் கும்பல், பணமோசடி உள்ளிட்ட குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறி அவர்களை ஏமாற்றி வந்ததாக டாங் வாங்கி மாவட்டக் காவல்துறைத் தலைவர் அஹ்மாட் அஸ்வான் அமின் நோர்டின் தெரிவித்தார். இதனை உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தக் கும்பலின் மோசடி நடவடிக்கை, NYPD அதிகாரிகளின் சீருடையைப் போன்ற உடைகளை அணிந்துகொண்டு, அந்தக் காவல்துறையின் சின்னம் இடம்பெற்ற பின்னணிக்கு முன்னால் நின்றபடி காணொளி அழைப்புகளை மேற்கொள்வதாகும். இதன் மூலம் தாங்கள் உண்மையான காவல்துறை அதிகாரிகள் எனப் பாதிக்கப்பட்டவர்களை நம்பவைத்துள்ளனர்.

இந்தக் கும்பல் அமெரிக்காவில் உள்ளவர்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டதுடன், காணொளி அழைப்புகளின்போது செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாக அஸ்வான் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

மேலும், தங்களது போலி அடையாளத்தை உண்மையானதாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களை நம்பவைக்க, NYPD-யின் அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் போன்ற போலி ஆவணங்கள், காவல்துறைச் சீருடைகள் மற்றும் முகத்தை மாற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றையும் இக்கும்பல் பயன்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக 22 முதல் 51 வயதுக்குட்பட்ட 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அஸ்வான் தெரிவித்தார். அவர்களில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நால்வர், தைவானைச் சேர்ந்த மூவர், மெக்சிகோ, ஜிம்பாப்வே, கென்யா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.

அவர்கள் சமூகப் பயண அனுமதிச் சீட்டில் சுற்றுலாப் பயணிகளாக மலேசியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், இந்தக் கும்பல் மாதம் 15,000 ரிங்கிட் வாடகைக்கு அந்த அடுக்குமாடிக் குடியிருப்பைப் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது.

“கைது செய்யப்பட்டவர்கள் இந்த மோசடிக் கும்பலின் நேரடி செயல்பாட்டாளர்கள் என நம்பப்படுகிறது. ஒவ்வொருவரும் நாளொன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டிருக்கலாம் என்ற சாத்தியத்தையும் நாங்கள் நிராகரிக்கவில்லை,” என்று அஸ்வான் கூறினார்.

இந்த மோசடி நடவடிக்கைக்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 31 கைப்பேசிகள், ஏழு மடிக்கணினிகள், மூன்று NYPD சீருடைத் தொகுப்புகள், NYPD இலச்சினை கொண்ட பலகை மற்றும் நியூயார்க் நகர வரைபடம் ஆகியவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மோசடி மற்றும் மோசடி முயற்சி தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், குற்றவியல் சட்டத்தின் 420 மற்றும் 511 ஆகிய பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு உதவும் வகையில் 11 சந்தேக நபர்களும் நவம்பர் 28ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.