மலேசிய ஹோட்டல் சங்கத்தின் கூற்றுப்படி, இந்தக் கொள்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிப்பதுடன், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் செல்லுபடியாகும் விசா வைத்திருக்க வேண்டும். இதற்கான விசா விண்ணப்பங்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் MyVISA இணையவழி தளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
மலேசியாவுக்கு வருகை தரும் இந்தியப் பிரஜைகளுக்கு புதிய விசா கட்டாயமாக்கும் திட்டத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மலேசிய ஹோட்டல் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரவுள்ள இந்தக் கொள்கை, முக்கியமான சுற்றுலாச் சந்தையாக விளங்கும் இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைப் பாதிக்கக்கூடும் என்றும் அவை தெரிவித்துள்ளன.
2025ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து சுமார் 15.7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்ததாக மலேசிய ஹோட்டல் சங்கம் (MAH) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது 2024ஆம் ஆண்டில் பதிவான 13.6 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடுகையில் 14.6 விழுக்காடு அதிகமாகும்.
2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் இந்தியாவிலிருந்து 7.38 லட்சம் சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் தனிப்பட்ட பயணங்கள், குடும்பச் சுற்றுலாக்கள், சுற்றுலாக் குழுக்கள், மதம் சார்ந்த பயணங்கள், திருமண நிகழ்ச்சிகள் மற்றும் நிறுவன நிகழ்வுகள் மூலம் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதாக MAH தலைவர் கிறிஸ்டினா தோ தெரிவித்தார்.
எனினும், பயணத்தைத் திட்டமிடுவதில் கூடுதலான நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவது, எளிதான நுழைவு நடைமுறைகளைக் கொண்ட பிற நாடுகளைத் தேர்ந்தெடுக்க இந்தியப் பயணிகளைத் தூண்டக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.
கடந்த நவம்பர் 17ஆம் தேதி, இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 2027 ஜனவரி 1ஆம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய செல்லுபடியாகும் விசா பெற்றிருக்க வேண்டும் என்று குடிநுழைவுத் துறை அறிவித்தது. இதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் 1ஆம் தேதி முதல் MyVISA இணையவழி வாயிலாகச் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தியர்கள் பலர் விசா இல்லாமல் மலேசியாவுக்குள் நுழையும் சலுகையைத் தவறாகப் பயன்படுத்தி வேலை தேடுவதாகவும், போலியான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை வழங்கும் முகவர்களால் பலர் ஏமாற்றப்படுவதாகவும் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் எச்சரித்திருந்தது. அதற்குச் சுமார் ஒரு மாதத்திற்குப் பின்னர் இந்தப் புதிய விசா நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பயணிகளை ஈர்ப்பதுடன் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் சமூகப் பயணங்களை எளிதாக்கும் நோக்கில் மலேசியாவின் விசா தளர்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 30 நாள்களுக்கான விசா விலக்கு 2023 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
தேவை குறைவடைவது ஹோட்டல்களின் அறை நிரப்பல் விகிதம், லாபம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வர்த்தக வரவு செலவுத் திட்டங்களைப் பாதிக்கக்கூடும் என்று தோ தெரிவித்தார்.
மேலும், முன்கூட்டியே செய்யப்பட்ட அறை முன்பதிவுகள், ஒப்பந்த அடிப்படையிலான குழுப் பயண முன்பதிவுகள், சுற்றுலாத் துறை வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் முதலீடுகளும் பாதிக்கப்படக்கூடும் என்றார்.
சுற்றுலா வருமானம் மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் குறைவதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என்றும் அவர் கூறினார். இதனால் சுற்றுலா முகவர்கள் உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளும் வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
புதிய விசா கட்டாயத்தை அறிமுகப்படுத்தும் முடிவை குடிநுழைவுத் துறையின் கண்ணோட்டத்தில் மட்டும் மதிப்பிடக் கூடாது.
“பொருளாதாரம், வேலைவாய்ப்பு, முதலீடு மற்றும் சர்வதேசப் போட்டித்தன்மை ஆகியவற்றில் ஏற்படக்கூடிய தாக்கங்களும் கவனமாக ஆராயப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் தங்குவதற்கான பயணத் திட்டங்களை பார்வையாளர்கள் எவ்வளவு எளிதாக மேற்கொள்ள முடிகிறது என்பதில் ஹோட்டல்களுக்கு நேரடிப் பங்கு இருப்பதாகக் குறிப்பிட்ட தோ, விசா சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் அதேவேளையில், உண்மையான சுற்றுலாப் பயணிகளுக்குக் கூடுதல் தடைகளை ஏற்படுத்தாத தீர்வை அரசாங்கம் பரிசீலிக்கும் எனத் தமது சங்கம் நம்புவதாகக் கூறினார்.
எனவே, 30 நாள்களுக்கான விசா விலக்குச் சலுகையை 2027 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்குமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.























