தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தவிர்த்து, இந்த அமைப்பு நேரடியாகத் தொலைபேசி பயனர்களுக்கு எச்சரிக்கைகளை அனுப்பும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் கூறுகிறார்.
தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில் (நடுவில்), குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள இணக்கமான கைத்தொலைபேசிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பும் MySiren திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
தேசிய ஆரம்பகட்ட எச்சரிக்கை அமைப்பான MySiren, பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை அணுகாமல், அவர்களது கைப்பேசிகளுக்கு மட்டுமே எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பும் என்று தொடர்புத்துறை அமைச்சர் பஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.
மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தால் (MCMC) இயக்கப்படும் இந்த அமைப்பு, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள இணக்கமான கைப்பேசிகளுக்கு நேரடியாக எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்புவதற்குக் கல ஒலிபரப்பு (Cell Broadcast System – CBS) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதற்காகப் பயனர்கள் எந்தவொரு செயலியையும் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பதிவு செய்யவோ தேவையில்லை.
குறுஞ்செய்தி (SMS) முறையிலிருந்து MySiren முற்றிலும் வேறுபட்டது. SMS முறையில், பெறுநர்களின் கைப்பேசி எண்களுக்கு செய்திகள் அனுப்பப்படும். ஆனால், தற்போது பயன்படுத்தப்படும் இந்த அமைப்பு, பயனர்களின் சாதனங்களிலிருந்து எந்தவொரு தகவலையும் தரவுகளையும் மீட்டெடுப்பதில்லை.
“மேலும், இந்த எச்சரிக்கைச் செய்திகளைப் பெறுவதற்கு பயனர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது,” என்று இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் MySiren அமைப்பைத் தொடக்கிவைத்த பின்னர் அவர் கூறியதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.
MySiren எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெறும் வசதிக்கான நாடு தழுவிய சோதனை நவம்பர் 29ஆம் தேதி காலை 10.10 மணிக்கு நடைபெறவுள்ளதாக பஹ்மி தெரிவித்தார்.
SMS முறையுடன் ஒப்பிடுகையில், MySiren-இன் CBS தொழில்நுட்பம் கைப்பேசிகளுக்கு மிக விரைவாக எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.
குறுஞ்செய்திகளைப் (SMS) பொறுத்தவரை, தகவல்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் வரிசையின் (queue) வழியாகச் செல்ல வேண்டும். ஆனால், இந்த அமைப்பு தொலைத்தொடர்பு நிறுவனங்களைத் தவிர்த்துவிட்டு, பேரிடர் எச்சரிக்கைகளை அனுப்பும் ஒலிபரப்பிகளாகச் (transmitters) செயல்படும் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு நேரடியாகச் செல்கிறது
“செயல்பாட்டில் உள்ள தொலைத்தொடர்புக் கோபுரம் அல்லது ஒலிபரப்புக் கருவியின் சேவைக்குட்பட்ட பகுதியில் இருக்கும் அனைத்துப் பயனர்களும் ஒரே நேரத்தில் ஒரே தகவலைப் பெறுவார்கள்,” என்றார் அவர்.
MySiren அமைப்பை இயக்கும் பொறுப்பு MCMC வசமே தொடர்ந்து இருக்கும் என்றும், அதேவேளையில் காவல்துறை, தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் போன்ற அதிகாரத் தரப்புகளும் இந்த அமைப்பைப் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
MySiren அமைப்பை உருவாக்கும் பணிகள் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், இதற்காக ரிம 200 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகவும் பஹ்மி கூறினார். 2024ஆம் ஆண்டு அக்டோபரில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது பிரதமர் அன்வார் இப்ராஹிம் இந்த முன்னெடுப்பை அறிவித்ததைத் தொடர்ந்து இத்திட்டம் தொடங்கப்பட்டது.
இதனிடையே, குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள இணக்கமான கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை ஒலியுடன் கூடிய அறிவிப்புகளை நேரடியாக அனுப்பும் திறனைச் சோதிப்பதற்காக, இன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைப்பின் செயல்முறை ஒத்திகையை நடத்தியதாக MCMC தெரிவித்தது.
நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய MySiren சோதனையை முன்னிட்டு, பொதுமக்கள் தங்களது கைப்பேசிகளின் இயங்குதளத்தை (Operating System) ஆக அண்மைய பதிப்புகளுக்குப் புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஐபோன்களுக்கு குறைந்தபட்சம் iOS 27.2, ஆண்ட்ராய்டு கைப்பேசிகளுக்கு Android 12 மற்றும் ஹுவாவே கைப்பேசிகளுக்கு EMUI 16 ஆகிய பதிப்புகள் இருக்க வேண்டும்.
அத்துடன், தங்களது கைப்பேசிகளில் உள்ள அரசாங்க எச்சரிக்கைகள் (Government Alerts) அல்லது வயர்லெஸ் அவசரகால எச்சரிக்கைகள் (Wireless Emergency Alerts) போன்ற அவசரகால அறிவிப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும் பயனர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை அறிவிப்புகளைப் பெறுவது கைப்பேசியின் இணக்கத்தன்மை, அதன் அமைப்புகள் மற்றும் 4G அல்லது 5G கைப்பேசி வலையமைப்புகளின் சேவை கிடைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று MCMC தெரிவித்தது.
MySiren தொடர்பான மேலதிக தகவல்களை www\.mcmc.gov.my/mysiren என்ற இணையத்தளத்திலும், MCMC-இன் அதிகாரபூர்வ சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.























