மலேசியா மற்றும் தைவானுக்கு இடையிலான முதலீட்டு உத்தரவாத ஒப்பந்தத்தை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு மறுஆய்வு செய்து வருவதாக இன்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
வியட்நாம், தாய்லாந்து, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளுடனான ஒப்பந்தங்களில் மலேசியா பின்பற்றிய அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணையமைச்சர் சிம் ட்சே சின் தெரிவித்தார்.
பரிந்துரைக்கப்படும் எந்தவொரு மேம்பாடுகளும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுவதை உறுதிசெய்ய, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் மற்றும் பேங்க் நெகாரா மலேசியா உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரசு முகமைகள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து மிட்டி கருத்துகளைக் கோரி வருவதாகவும் அவர் கூறினார்.
மலேசியா மற்றும் தைவானுக்கு இடையே 1993-ஆம் ஆண்டு கையெழுத்தான இந்த முதலீட்டு உத்தரவாத ஒப்பந்தம் (IGA) தொடர்ந்து அமலில் உள்ளது என்றும் சிம் தெரிவித்தார்.
உகந்த முதலீட்டுச் சூழலை உருவாக்குவதற்கும், வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் மலேசியா எப்போதும் உறுதியுடன் உள்ளது
இருப்பினும், இந்த முதலீட்டு உத்தரவாத ஒப்பந்தத்தை மேம்படுத்துவது தொடர்பான எந்தவொரு பரிசீலனையும் மலேசியாவின் தேசிய நலன்கள், வெளியுறவுக் கொள்கை மற்றும் தூதரக நிலைப்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும், என்று 2027-ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கை மீதான தனது அமைச்சின் குழு நிலை விவாதத்திற்குப் பதிலளித்து உரையாற்றும்போது அவர் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், தைவான் “சீனாவின் ஒரு பகுதி” என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியதைத் தொடர்ந்து, மலேசியாவுடனான இருதரப்பு முதலீட்டுப் பேச்சுவார்த்தைகளை தைவான் நிறுத்தி வைத்துள்ளதாக நவம்பர் 11-ஆம் தேதி ‘தைபே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அன்வாரின் இந்தக் கருத்துகள், மலேசியாவில் முதலீடு செய்ய விரும்பும் தைவான் நிறுவனங்களின் நம்பிக்கையைச் சிதைக்கக்கூடும் என்று தைவான் தெரிவித்திருந்தது.
இருப்பினும், மலேசியாவில் இருந்து தைவான் முதலீட்டாளர்கள் வெளியேறுவதற்கோ அல்லது புதிய முதலீடுகளை நிறுத்தி வைப்பதற்கோ எந்த அறிகுறியும் இல்லை என்று அதற்கு அடுத்த நாள் மக்களவையில் அன்வார் தெரிவித்தார்.
-fmt
























