அம்பலமான இரகசியம் – சிறை கைதி நஜிப்க்கு வீட்டுக் காவல்

இதர தரப்புகளின் தஎதிர்ப்புகளையும் மீறி நஜிப்பிற்கு வீட்டுக் காவல் வழங்க யாங் டி-பெர்டுவான் அகோங் விரும்பினார்

நஜிப் அப்துல் ரசாக்கிற்கு வீட்டுக் காவல் வழங்கப்பட்ட கூட்டாட்சிப் பிரதேசங்களின் மன்னிப்பு வாரியத்தின் விசாரணைக் கூட்டக் குறிப்புகள் வெளியாகி உள்ளன. எதிர்ப்புகளையும் மீறி முன்னாள் பிரதமருக்கு வீட்டுக் காவல் வழங்க யாங் டி-பெர்டுவான் அகோங் ஒப்புதல் அளித்ததை அவை உறுதிப்படுத்துகின்றன.

மலேசியாகினிக்கு நம்பகமான ஒரு மூலத்திலிருந்து இந்தக் குறிப்புகள் கிடைத்தன. வீட்டுக் காவல் உத்தரவுக்கு எதிராக வழக்கறிஞர் மன்றம் தொடுத்த சட்டரீதியான வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, நீதிமன்ற நோக்கங்களுக்காக இந்த ஆவணங்கள் இரகசியம் நீக்கப்பட்டதாம்.

இருப்பினும், இன்று காலை நிலவரப்படி இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.

கருத்து கேட்பதற்காக, தலைமை வழக்கறிஞர் துசுகி மொக்தார், பிரதமர் துறையின் (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா யோ, பிரதமர் அலுவலகம், வழக்கறிஞர் சங்கம் மற்றும் அதன் வழக்கறிஞர்கள், மற்றும் நஜிப்பின் வழக்கறிஞர்கள் ஆகியோரை மலேசியாகினி தொடர்பு கொண்டுள்ளது.

கூட்டக் குறிப்புகளின்படி, வீட்டுக் காவலுக்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று துசுகி கூறினார்.

மேலும், வீட்டுக் காவல் வழங்குவது அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார நிலைமைகள், முதலீடுகள் மற்றும் நாட்டின் சர்வதேசப் பிம்பம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசாங்கத்திற்குப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

தலைமை வழக்கறிஞர் துசுகி மொக்தார்

கூட்டக் குறிப்புகளில் ‘குற்றவாளி’ என்று குறிப்பிடப்படும் நஜிப், தனது முழு சிறைத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பின்னர், யோ தானும் இதே போன்ற கருத்தைப் பகிர்ந்துகொள்வதாகக் கூறி, இவ்விஷயத்தில் தனது முந்தைய நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

மற்ற வாரிய உறுப்பினர்களும் நஜிப்பிற்கு வீட்டுக் காவல் வழங்குவது குறித்துக் கவலைகளை எழுப்பினர். இருந்தபோதிலும், மன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், 50 மில்லியன் ரிங்கிட் செலுத்தப்படும் என்ற நிபந்தனையின் பேரில் வீட்டுக் காவல் வழங்க இறுதியாக முடிவு செய்தார்.

வீட்டுக் காவலில் இருக்கும்போது நஜிபுடன் யார் தங்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது தொடர்பாக, அகோங் இரண்டு திருத்தங்களைச் செய்தார் – அதில் “இஸ்தேரி” (மனைவி) என்ற வார்த்தையை “இஸ்தேரி-இஸ்தேரி” (மனைவிகள்) என்று மாற்றினார்.

மற்றொரு திருத்தம், சிறைத்துறை தலைமை இயக்குநரிடமிருந்து முன் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற்றால், நஜிப் நிகழ்வுகளை நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ அனுமதிக்கும் ஒரு பிரிவை நீக்குவதாகும்.

ஹன்னா யோ மற்றும் துசுகி வீட்டுக் காவல் உத்தரவுக்கு எதிராக இருந்ததால், அவர்கள் இந்த நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து தங்கள் கருத்தைத் தெரிவிக்கவில்லை.

அமைச்சர் வேறு ஒருவர் கையொப்பமிட வேண்டும் என விரும்பினார்

இதற்கிடையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு தவறான மன்னிப்பு முடிவுக்குப் பதிலளிக்கும் விதமாக,ஹன்னா யோ, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் போன்ற, தன்னைத் தவிர வேறு ஒரு நபர் வாரியத்தின் முடிவில் கையொப்பமிட வேண்டும் என்று கூட்டத்தில் பரிந்துரைத்தார்.

பிரதமரின் துறையின் அமைச்சர் (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) ஹன்னா யோ

அவர் மீண்டும் அரசாங்கத்தின் மீதான பெரும் அரசியல் தாக்கத்தை சுட்டிக்காட்டினார்.

இருப்பினும், தலைமைச் செயலாளர் மன்னிப்பு வாரிய உறுப்பினர் அல்ல என்பதைச் சுட்டிக்காட்டிய அகோங், ஹன்னா யோஹ தனது கடமைகளைச் செய்து நிபந்தனைக்குட்பட்ட மன்னிப்பு உத்தரவில் கையொப்பமிடுமாறு உத்தரவிட்டார்.