புகைமூட்டம் பாதிப்பு காரணமாக பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்து MOH ஆலோசனை வழங்கும்; இறுதி முடிவை MOE மற்றும் MOHE எடுக்கும் – டாக்டர் சுல்கேஃப்லி.

கல்வி நிறுவனங்களை மூடுவது குறித்த சுகாதார ஆலோசனைகளை மட்டுமே சுகாதார அமைச்சு வழங்கும்; ஆனால் இறுதி முடிவை கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகளே எடுக்கும்.

காற்றின் தரக் குறியீடு (Air Pollutant Index – API) 100-ஐத் தாண்டும் போது, வகுப்பறைக்கு வெளியே நடக்கும் செயல்பாடுகள், கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை குறைக்க சுகாதார அமைச்சு ஆலோசனை வழங்கும்.

அதே நேரத்தில், காற்றின் தரக் குறியீடு (API) 200-ஐத் தாண்டும் போது, பள்ளிகள், மழலையர் பள்ளிகள் (kindergartens) மற்றும் குழந்தை காப்பகங்களை (nurseries) மூடுவதற்கு அறிவுறுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் சில்கேப்ளி அகமத் (Dzulkefly Ahmad) இன்று மக்களவையில் தெரிவித்தார்.

தற்போதைய புகைமூட்ட நிலைமை காரணமாக பள்ளிகளை மூடுவதற்கான அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன்பு, கல்வி அமைச்சோ அல்லது மாநில கல்வி இலாகாக்களோ சுகாதார அமைச்சைக் கலந்தாலோசித்தனவா என்று சா கீ சின் (Cha Kee Chin – ஹராப்பான், ராசா) கேட்ட கேள்விக்கு சுல்கேப்ளி (ஹராப்பான், கோலா சிலாங்கூர்) பதிலளித்தார்.

இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தேசிய புகைமூட்ட நடவடிக்கை திட்டத்தின் (National Haze Action Plan) கீழ், கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகளுக்கும் அவரவர் பங்குகள் உள்ளன என்றும் சுல்கேப்ளி கூறினார்.

“இறுதியில், பள்ளிகளை மூடுவதா இல்லையா என்ற முடிவு கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் (Fadhlina Sidek) மற்றும் உயர்கல்வி அமைச்சர் ஸம்ப்ரி அப்துல் காதிர் (Zambry Abd Kadir) ஆகியோரிடமே உள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், பொதுமக்கள் வெளிப்புற விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளைக் குறைக்கவும், முடிந்தவரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும், வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியவும், குறிப்பாகப் பாதிப்புக்குள்ளாகக்கூடிய குழுவினர் (vulnerable groups) கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

காற்றின் தரக் குறியீடு 200-ஐத் தாண்டும் பகுதிகளில் மட்டுமே பள்ளிகள் மூடப்படும் என்றும், 100-க்கு மேல் பதிவாகும் பகுதிகளில் வெளிப்புற வகுப்பறை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் அறிவித்ததைத் தொடர்ந்து சுல்கேப்ளியின் இந்த பதில் வந்துள்ளது.

மோசமடைந்து வரும் புகைமூட்டத்திற்கு மத்தியில், கல்வி அமைச்சு தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களை மூடுவதற்கான வரம்பை (threshold) அக்டோபர் 8 அன்று குறைத்ததைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளிவந்துள்ளது.

முந்தைய வழிகாட்டுதலின்படி, API 180-ஐத் தாண்டும் பகுதிகளில் உள்ள கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். அல்லது API தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 150-ஐத் தாண்டினாலும் அவை மூடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புகைமூட்டம் தொடர்பான நோய்களின் அதிகரிப்பு

இதே பதிலில், நாடு முழுவதிலும் உள்ள 78 கண்காணிப்பு சுகாதார மையங்கள் (sentinel health facilities) மூலம் கண்காணிக்கப்பட்டதில், புகைமூட்டம் தொடர்பான நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளதை சுல்கேப்ளி வெளிப்படுத்தினார்.

36-வது தொற்றுநோயியல் வாரத்தில் (epidemiological week), மேல் சுவாசப் பாதை தொற்று (URTI) பாதிப்புகள் 167 சதவீதம் உயர்ந்து 7,065 ஆகவும், ஆஸ்துமா பாதிப்புகள் 127 சதவீதம் உயர்ந்து 1,117 ஆகவும் அதிகரித்துள்ளன.

அதே காலகட்டத்தில் கண் அழற்சி (Conjunctivitis) பாதிப்புகளும் 83 சதவீதம் உயர்ந்து 334 ஆக அதிகரித்துள்ளன.

40-வது தொற்றுநோயியல் வாரத்திற்குள், சுகாதார அமைச்சு 5,613 மேல் சுவாசப் பாதை தொற்று (URTI) பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளது; இது கிட்டத்தட்ட 60 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

பாதிப்புகள் அதிகரிப்பதைக் கண்காணிப்பதையும் ஆயத்த நிலையையும் வலுப்படுத்த, சுகாதார அமைச்சு ஆகஸ்ட் 9 முதல் 15 வரையிலான 32-வது தொற்றுநோயியல் வாரத்திலிருந்து, நெருக்கடி ஆயத்தநிலை மற்றும் மறுமொழி மையம் (Crisis Preparedness and Response Centre – CPRC) மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதாக சுல்கேப்ளி தெரிவித்தார்.

கண்காணிப்பு, நடவடிக்கை ஒருங்கிணைப்பு மற்றும் பொது சுகாதார பதிலளிப்புகளை வலுப்படுத்துவதற்காக தேசிய புகைமூட்ட செயல்பாட்டு அறை (National Haze Operations Room) செப்டம்பர் 4 அன்று செயல்படுத்தப்பட்டது.

பாதிப்புகள் திடீரென அதிகரிக்கும் சூழ்நிலையைக் கையாள சுகாதார அமைச்சு 841 பெரியவர்களுக்கான ஏரோசேம்பர் (AeroChamber) கருவிகளையும், 396 குழந்தைகளுக்கான கருவிகளையும், 556 நெபுலைசர்களையும் (nebulisers) கூடுதலாகச் சேர்த்துள்ளது.

புகைமூட்ட நிலைமையைக் கண்காணிக்கவும் பொது சுகாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் சுகாதார அமைச்சு, சுற்றுச்சூழல் துறை, வானிலை ஆய்வுத் துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதாக சுல்கேப்ளி தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்களின் பகுதிகளில் உள்ள காற்றின் தரக் குறியீடு (API) அளவுகளைக் கண்காணித்து, அதிகாரிகளால் வெளியிடப்படும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.