அமைச்சகத்தின் உள்விவகாரங்கள் குறித்துப் புகார்களையோ அல்லது கருத்துக்களையோ தெரிவிப்பதற்கு அதிகாரப்பூர்வமற்ற வழிகளைப் பயன்படுத்திய சுகாதாரப் பணியாளர்கள் மீது சுகாதார அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இத்தகைய விவகாரங்கள் அவர்களின் கடமைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பாமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களுக்கு அறிவுரை வழங்குவதற்கே அமைச்சகம் முன்னுரிமை அளிப்பதாகச் சுகாதாரத் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் அஸ்மான் யாகோப் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
மற்ற துறைகள் அல்லது நிறுவனங்களை விமர்சித்து சமூக வலைதளங்களில் அளிக்கப்படும் புகார்கள் பதற்றத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தக்கூடும் என்றும், இது சுகாதாரப் பணியாளர்களைத் தங்களின் பொறுப்புகளிலிருந்து திசைதிருப்ப வாய்ப்புள்ளது.
இதுவரை எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, எழுப்பப்படும் பிரச்சினைகள் மற்ற துறைகள் அல்லது அரசு நிறுவனங்களை உள்ளடக்கியதாக இருக்கும்போது, இன்னும் பணியில் இருப்பவர்களுக்கு நாங்கள் அறிவுரை வழங்குகிறோம்.
மருத்துவமனை நிர்வாகம், மாநில சுகாதார இயக்குநர்கள் அல்லது அமைச்சகத்தில் உள்ள வழிமுறைகள் உட்பட, உரிய வழிகளைப் பயன்படுத்தி அவர்கள் புகார்களையும் கருத்துக்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம், என்று கோத்தா பாருவில் உள்ள ராஜா பெரெம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் இன்று நடைபெற்ற ‘நோயாளிகளின் கண்ணியப் பராமரிப்புப் பட்டதாரிகள்’ திட்டத்தின் தொடக்க விழாவிற்குப் பிறகு அவர் கூறினார்.
அமைச்சகத்தின் உயர்மட்ட நிர்வாகத்துடனான சந்திப்புகள் உட்பட, சுகாதாரப் பணியாளர்களின் நலன், தேவைகள் மற்றும் கவலைகள் குறித்து விவாதிப்பதற்கான வாய்ப்புகளை அமைச்சகம் தொடர்ந்து வழங்கி வருவதாக அஸ்மான் கூறினார்.
கொடுப்பனவுகள், பணியிட மாற்றங்கள் மற்றும் பணியாளர் தேவைகள் போன்ற விவகாரங்கள் எப்போதும் அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குள் மட்டுமே வருவதில்லை என்றும், சில முடிவுகளுக்குப் பொதுச் சேவைத் துறை (JPA) மற்றும் நிதி அமைச்சகம் உள்ளிட்ட பிற நிறுவனங்களின் தலையீடும் தேவைப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
மருத்துவ அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுக்கான ‘ஆன்-கால்’ (on-call) எனப்படும் அழைப்புப் பணி கொடுப்பனவில் அண்மையில் செய்யப்பட்ட உயர்வு, அப்பணிகளைச் செய்பவர்களின் மாத வருமானத்தை அதிகரிக்கக்கூடும் என்றும், மாதத்திற்கு ஐந்து முதல் ஆறு அழைப்புப் பணிகளைச் செய்பவர்களுக்கு இந்தக் கூடுதல் தொகை சுமார் 1,000 ரிங்கிட் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், செவிலியர்களுக்கான அடிப்படைக் கல்விக்குப் பிந்தைய பயிற்சிக் கொடுப்பனவு (post-basic allowance) அடுத்த ஆண்டு முதல் 100 ரிங்கிட்டிலிருந்து 200 ரிங்கிட்டாக உயர்த்தப்படுவது உள்ளிட்ட பிற மேம்பாடுகளும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.
-fmt
























