பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இணைய உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்துவதில் தனது துணை நிறுவனமான யூடியூப் தோல்வியடைந்ததாகக் கூறி, கூகுள் எல்எல்சி (Google LLC) நிறுவனத்துக்கு எதிராக மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ள போதிலும், அது மலேசியாவில் அந்நிறுவனத்தின் முதலீடுகளைப் பாதிக்காது என்று புத்ராஜெயா உறுதியளித்துள்ளது.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், MCMCயின் இந்த முடிவு குறித்து விவாதிப்பதற்காக நேற்று கூகுள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியான ரூத் போராட்டைத் (Ruth Porat) தொடர்புகொண்டதாகத் தெரிவித்தார்.
குறிப்பாக, இணைய சூதாட்டம் தொடர்பான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் பதிவுகளை யூடியூப் தளத்திலிருந்து விரைவாக அகற்றுவதை உறுதிப்படுத்துவதில் MCMC சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அன்வார், இத்தகைய பிரச்சினைகளைக் கையாள்வதில் கூகுள் ஒத்துழைப்பு வழங்கும் என ரூத் போராட் உறுதியளித்ததாகக் கூறினார்.
இதே கருத்தைத் தெரிவித்த அரசாங்கப் பேச்சாளர் பஹ்மி பட்சில், கூகுள் நிறுவனத்துக்கு எதிராக MCMC தொடர்ந்துள்ள வழக்குகளுக்கும், அந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தின் மலேசிய முதலீடுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.
“ஒழுங்குமுறை விவகாரத்தைப் பொறுத்தவரை, எங்களுடைய நிலைப்பாடு ஒன்றுதான். 2025ஆம் ஆண்டின் இணையப் பாதுகாப்புச் சட்டத்தின்படி (Online Safety Act – OSA), மலேசியர்கள் தீங்கு விளைவிக்கும் இணைய உள்ளடக்கங்களுக்கு ஆளாகக் கூடாது,” என்று இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பஹ்மி தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை மலேசியாவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரிம 60.96 பில்லியன்) முதலீடு செய்ய கூகுள் திட்டமிட்டுள்ளதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் புதிய தரவு மைய வளாகங்களை அந்நிறுவனம் அமைக்கவுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் பஹ்மி பட்சில்
சிலாங்கூரின் எல்மினா வர்த்தகப் பூங்காவில் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள கூகுளின் முதல் தரவு மைய வளாகத்துக்கு மேலதிகமாக இந்தப் புதிய முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புதிய வளாகங்களின் கட்டுமானப் பணிகள் மூலம் மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (GDP) ஆண்டுதோறும் சராசரியாக 1.1 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரிம 4.5 பில்லியன்) பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ஆண்டுதோறும் 37,000க்கும் அதிகமான உள்ளூர் வேலைவாய்ப்புகளுக்கும் ஆதரவளிக்கும்.
தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அகற்றுமாறு விடுக்கப்படும் கோரிக்கைகளுக்கு யூடியூப் இணங்குவதை உறுதிப்படுத்த, ஏற்கெனவே உள்ள உரிமம் வழங்கும் மற்றும் ஒழுங்குமுறை அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஏன் MCMC கூகுள் நிறுவனத்தை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றது என்றும் பஹ்மியிடம் இன்று கேள்வி எழுப்பப்பட்டது.
‘மிகவும் அலட்சியமாகவும் மெதுவாகவும் செயல்படுகிறது’
இதற்குப் பதிலளித்த தொடர்பாடல் அமைச்சர், இத்தகைய உள்ளடக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் யூடியூப் “மிகவும் அலட்சியமாகவும் மிகவும் மெதுவாகவும்” செயல்படுவதாக மீண்டும் வலியுறுத்தினார்.
சில உள்ளடக்கங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க 90 நாள்கள் வரை எடுத்துக்கொள்வதாகவும், தாங்கள் விடுத்துள்ள வேறு சில கோரிக்கைகளின் நிலை என்ன என்பது குறித்துத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
“ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஒழுங்குமுறைச் சட்டகத்துக்கு இணங்க யூடியூப் முறையாகச் செயல்படுவதை உறுதிப்படுத்துவதற்காக MCMC தேர்ந்தெடுத்துள்ள ஒரு நடவடிக்கையே இந்த வழக்குகள்,” என்று பஹ்மி தெரிவித்தார்.
ஜனவரி 1ஆம் தேதி முதல், யூடியூப் உள்ளிட்ட எட்டு மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூக ஊடகத் தளங்கள், விண்ணப்பச் சேவை வழங்குநர் (ASP) வகுப்பு உரிமத்தின் கீழ் தானாகவே உரிமம் பெற்றவையாகக் கருதப்பட்டன. இதனால் சம்பந்தப்பட்ட தளங்கள் MCMCயின் உரிம நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் இந்தத் தளங்களுக்கு தானாகவே உரிமம் வழங்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, கூகுள், மெட்டா, அமேசான் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பு, 2024ஆம் ஆண்டு இந்த உரிம நடைமுறையைத் தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது.
ஆசிய இணையக் கூட்டமைப்பு (Asia Internet Coalition – AIC) என்ற பெயரில் ஒன்றிணைந்த இந்த நிறுவனங்கள், தங்களது கடிதத்தில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்த முடியாத ஒன்று என்று குறிப்பிட்டதுடன், ஒழுங்குமுறை விதிகளுக்கு இணையத் தளங்கள் சாதகமாகப் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுவதையும் மறுத்திருந்தன.
இந்த வாரத் தொடக்கத்தில், இணையச் சூதாட்டம், மோசடிகள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கு எதிரான கருத்துகள் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த யூடியூப் தவறியதாகக் கூறி, கூகுளுக்கு எதிராக MCMC இரண்டு வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
முதல் வழக்கு இணையச் சூதாட்டம், மோசடிகள் மற்றும் ஏமாற்று நடவடிக்கைகள் தொடர்பான உள்ளடக்கங்களைக் குறிக்கிறது. இரண்டாவது வழக்கு, பதிவர் வான் அஸ்ரி வான் டெரிஸ் (Wan Azri Wan Deris), பொதுவாக பாப்பகோமோ (Papagomo) என்று அறியப்படுபவரின் காணொளிகள் மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட்டதை அகற்றுவதில் யூடியூப் தோல்வியடைந்ததாகக் கூறப்படுவது தொடர்பானதாகும்.
இந்த இரண்டு வழக்குகளிலும் தலா ரிம 300 மில்லியன் இழப்பீடு கோரி வருவதாக MCMC தெரிவித்திருந்தது. இதில் பொதுவான இழப்பீடு, அதிகரிக்கப்பட்ட இழப்பீடு மற்றும் முன்மாதிரியான இழப்பீடு ஆகியவற்றுக்காகத் தலா ரிம 100 மில்லியன் கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இறக்குமதி வரி
இதற்கிடையில், மலேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 19 விழுக்காட்டுக்கும் அதிகமான இறக்குமதி வரியை விதித்தால் அதனை எதிர்கொள்வதற்கான மாற்றுத் திட்டம் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் குறிப்பாக விவாதிக்கப்படவில்லை என்று பஹ்மி தெரிவித்தார்.
இறுதி வரி விகிதம் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது மலேசியப் பொருட்களுக்கு ஜூலை 24ஆம் தேதி முதல் 10 விழுக்காடு கட்டாயத் தொழிலாளர் தொடர்பான இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) மலேசியாவுக்கான அண்மைய முன்மொழியப்பட்ட இறக்குமதி வரி குறித்து அமைச்சரவைக்குத் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட பஹ்மி, இதுதொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி விளக்கமளித்து வருவதாகக் கூறினார்.
நேற்று பேசிய ஜொஹாரி, பரஸ்பர வர்த்தக ஒப்பந்தத்தில் (Agreement on Reciprocal Trade – ART) முதலில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாக மலேசியா இருப்பதால் கிடைக்கும் சலுகையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த ஒப்பந்தத்தின்படி இறக்குமதி வரி விகிதம் 19 விழுக்காட்டைத் தாண்டக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியப் பொருட்களுக்கு 18 விழுக்காடு வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்கலாம் என்று USTR முன்மொழிந்ததைத் தொடர்ந்து ஜொஹாரி இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
மேலும், 1974ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 301இன் கீழ் ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள வரிகளைத் தவிர்த்து, 25 விழுக்காடு வரை வரி விதிப்பதையும் அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தற்போதைய ஆலோசனைகளின் முடிவுகள் மற்றும் ART ஒப்பந்தத்தின் கீழ் மலேசியா அளித்துள்ள உறுதிமொழிகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்.
மலேசியாவின் தொழில்துறை கொள்கைகள் மற்றும் உற்பத்தி நடைமுறைகள் அதிகப்படியான உற்பத்தித் திறனை உருவாக்கி, வர்த்தகத்தைச் சீர்குலைப்பதுடன் அமெரிக்க வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துவதாக USTR மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது.
எனினும், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை ஜொஹாரி ஏற்கெனவே மறுத்துள்ளார்.
























