நேப்பாள் பேரிடரினால் துயர்:அரசியல் கட்சிகள் உதவுமா?

இராகவன் கருப்பையா – கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நேப்பாளில் நிகழ்ந்த வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மலேசியர்களுக்கு நம் சமூகத்தைச் சார்ந்த ஆரசியல் கட்சிகள் எவ்வகையில் உதவிக் கரம் நீட்டின என்று தெரியவில்லை.

அந்தப் பேரிடரில் காணாமல் போன 5000கும் மேற்பட்டோரில் மலேசியாவைச் சேர்ந்த மொத்தம் 54 பேரும் ஆடங்குவர். அவர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது புதையுண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

மலேசிய அரசாங்கத்தின் ‘நட்மா'(NADMA) எனப்படும் தேசிய பேரிடர் நிர்வாக நிறுவனம், அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா 10,000 ரிங்கிட்டை உதவி நிதியாக வழங்கியுள்ளது. அந்த 54 பேரில் பெரும்பாலோர் இந்து ஆலயங்களுக்கும் சுற்றுப் பயணிகளாகவும் சென்றவர்கள் என்று நம்பப்படுகிறது.

இப்படிப்பட்டச் சூழலில் நம் சமூகத்தைச் சார்ந்த முன்னணி அரசியல் கட்சிகளான எம்.ஐ.பி.பி.(MIPP), ஐ.பி.எஃப்,(IPF), ம.இ.கா.(MIC) மற்றும் மக்கள் சக்தி, முதலிய அமைப்புகள் அந்த குடும்பங்களுக்கு உதவி செய்தனவா என்று தெரியவில்லை.

அந்த 54 பேரும் மரணமடைந்துவிட்டதாக உறுதிப்படுத்தும் பத்திரங்களை நேப்பாள் அரசாங்கம் அடுத்த மாதம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்பத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு மலேசிய அரசாங்கம் பிறகு இறப்புச் சான்றிதழ்களை வெளியிடும்.

மலேசிய சட்டவிதிகளின் படி, ஒருவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் கழித்துதான் அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவிக்கப்படும். ஆனால் இந்த 54 பேரின் குடும்பங்ளுக்கு இன்னும் ஒரு சில வாரங்களில் நம் அரசாங்கம் இறப்புப் பத்திரங்களை தயார் செய்துவிடும்.

அப்பத்திரங்களைக் கொண்டுதான் ஆயுள் காப்புறுதி, பயணக் காப்புறுதி, இ.பி.எஃப்.(EPF) எனப்படும் ஊழியர் சேமநிதி, ‘சொக்சோ'(SOCSO) எனப்படும் சமூகப் பாதுகாப்பு நிறுவனம் மற்றும பொருளகங்கள் போன்றவற்றிலிருந்து அவர்களுடைய பணத்தை மீட்க முடியும்.

ஆனால் எல்லாரிடமும் ஆயுள் காப்புறுதி, பயணக் காப்பறுதி மற்றும் இ.பி.எஃப். போன்றவற்றில் சேமிப்பு இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படி இல்லாதவர்களுக்கு யார் உதவுவது?

நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நம் சமூகத்தைச் சார்ந்த அரசியல் கட்சிகளின் முழு கவனமும் தற்பொழுது அதில்தான உள்ளதை நம்மால் காணமுடிகிறது.

எந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கும், அந்தத் தொகுதிகளில் யார் போட்டியிடுவது போன்ற பேரம்தான் தற்பொழுது மும்முரமாக நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

நம் சமூகத்தைச் சார்ந்த நிறைய பேருடைய குடும்பங்கள் நேப்பாள் பேரிடரில் பாதிக்கப்பட்டு துயரத்தில் மூழ்கியிருக்கும் வேளையில் அவர்களுக்கு ஆறுதலாக உதவுவது நம் அரசியல் கட்சிகளின் கடப்பாடு இல்லையா? “யாருக்கு என்ன நேர்ந்தால் என்ன? அரசியல்தான் எங்களுக்கு முக்கியம், நாங்கள் ‘சீட்டு’களுக்காக ஓடிக் கொண்டிருக்கிறோம்,” என்றா இருப்பது?

இப்படி அலட்சியமாக இருந்துவிட்டு, “நாங்கள்தான் தாய்க்கட்சி, நாங்கள்தான் சமுதாயத்திற்காக போராடுகிறோம், நாங்கள்தான் நம் மக்களுக்காக சிறந்த சேவையாற்றுகிறோம், நம் சமூகத்திற்கு ஒரு பிரச்சனையென்றால் நாங்கள்தான் முன் நிற்போம்,” என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்வதில் அர்த்தமில்லை. அதனால் எந்தப் பயனும் இல்லை.

பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களுக்கு ‘அள்ளிக் கொடுக்காவிட்டாலும், கிள்ளிக் கொடுத்தால்’ சற்று ஆறுதலாக இருக்கும் அல்லவா?