நற்பண்புகள் இல்லாத கல்விச் சிறப்பிற்குப் பெரிய அர்த்தமில்லை -பகாங் சுல்தான்

அறிவை நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டுமே தவிர, ஒற்றுமையைச் சீர்குலைத்து பகைமையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்று அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் (UniKL) 23ஆவது பட்டமளிப்பு விழாவில் பஹாங் மாநில சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா மற்றும் பஹாங் மாநில பேரரசி துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாக்களில் சிறந்து விளங்கும் அதேவேளை, ஒழுக்கப் பண்புகளில் தோல்வியடையும் ஒரு தலைமுறையாகப் பட்டதாரிகள் மாறிவிடக் கூடாது என பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா எச்சரித்துள்ளார்.

ஒற்றுமையைச் சீர்குலைத்து, பகைமையைத் தூண்டுவதற்குப் பதிலாக, நாட்டைக் கட்டியெழுப்பவும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், மக்களின் வாழ்க்கை முறையை நீண்டகாலமாகப் பாதுகாத்து வந்த நாட்டின் அடிப்படை அம்சங்களையே அலட்சியமாகக் கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு இளைய தலைமுறையினரும் பொதுமக்களும் ஆணவம் கொண்டுவிடக் கூடாது என்றும் அல்-சுல்தான் அப்துல்லா நினைவூட்டினார்.

வாய்ப்புகள், சுதந்திரமான வெளி மற்றும் உரிமைகள் ஆகியவை உங்களின் தலைக்கேறி, உயர்ந்த நிலையை அடையும்போது உங்களுடைய வேர்களை மறந்துவிடும் நிலை ஏற்பட அனுமதிக்காதீர்கள்.

“உண்மையில், சுதந்திரம் என்பது ஒருவர் விரும்பியபடி செயல்படுவதற்கான அனுமதிப்பத்திரம் அல்ல. துணிச்சல் என்பது முரட்டுத்தனமாக நடந்துகொள்வதற்கான காரணமல்ல. அதேபோல், அனைவரின் கருத்துக்கும் எதிராக உரத்த குரலில் பேசுவதோ அல்லது அறிவு மற்றும் உண்மைகளின் அடிப்படையின்றி அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குவதோ விவேகத்தின் அளவுகோல் அல்ல,” என்று அவர் கூறினார்.

கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் (UniKL) 23ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்நிலையைக் கடைப்பிடிக்கும் அனைவரும் போராளிகள் அல்ல; உரத்த குரலில் பேசும் அனைவரும் சரியான கருத்தைக் கொண்டிருப்பவர்களும் அல்ல; அனைத்தையும் கேள்விக்குள்ளாக்குவதில் ஆர்வம் காட்டும் அனைவரும் அறிவாளிகளும் அல்ல என்றும் அல்-சுல்தான் அப்துல்லா கூறினார்.

“கருத்து வேறுபாடுகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் நாம் ஒருபோதும் நிராகரித்ததில்லை. ஆனால், விமர்சனங்கள் உண்மைகளின் அடிப்படையில் அமைய வேண்டும். ஆலோசனைகள் மரியாதையுடன் முன்வைக்கப்பட வேண்டும். அதேபோல், நிலைப்பாடுகளில் காணப்படும் வேறுபாடுகள் நிதானமான சிந்தனையை இழக்கச் செய்துவிடக் கூடாது,” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பகாங் ராணி தெங்கு அம்புவான் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கந்தரியாவும், பகாங் பட்டத்து இளவரசர் தெங்கு ஹசனல் இப்ராஹிம் ஆலம் ஷாவும் கலந்து கொண்டனர்.

துணைப் பிரதமரும் UniKL பல்கலைக்கழகத்தின் வேந்தர் குழுவின் தலைவருமான அஹ்மத் ஸாஹிட் ஹமிடி, UniKL துணைவேந்தர் பேராசிரியர் குஷைரி அப்துல் காதிர் மற்றும் மாரா தலைவர் அஷ்ரஃப் வஜ்டி டுசுகி ஆகியோரும் அவர்களுடன் வருகை தந்திருந்தனர்.