இராகவன் கருப்பையா- தொடக்கம் முதல் சகல விஷயங்களிலும் சாதகமான சூழல்களையே அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் நஜிப், ‘தங்கத் தட்டில் பிறந்த’வர் என்றால் அது மிகையாகாது.
கடந்த 1976ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமராக இருந்த நஜிபின் தந்தை துன் ரஸாக் மரணமடைந்ததைத் தொடர்ந்து, அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பஹாங் மாநிலத்தின் பெக்கான் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அம்னோ சார்பாக அத்தொகுதியில் போட்டியிட 22 வயதே நிரம்பிய நஜிப் நிறுத்தப்பட்ட வேளையில் அவரை எதிர்த்து யாருமே போட்டியிடவில்லை. எனவே நாட்டின் வரலாற்றில் மிக இளமையான நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
பிறகு தனது 25ஆவது வயதில் ஒரு துணையமைச்சராக நியமிக்கப்பட்ட நஜிப் 4 ஆண்டுகள் கழித்து பஹாங் மாநிலத்தின் மந்திரி பெசாரானார். தனது 29ஆவது வயதில் ஒரு மாநில் மந்திரி பெசாராக அவர் நியமனம் பெற்றதும் கூட ஒரு வரலாறுதான்.
ஒரு பிரதமரின் மூத்த மகனாகப் பிறந்து, செல்வ செழிப்போடு வளர்ந்து, ‘வியர்வை சிந்தாமல்’ இளவயதிலேயே அரசியலில் நுழைந்து, கிடுகிடுவென உயர்ந்து, உச்சத்தைத் தொட்ட நஜிப் உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டக்காரர்தான்.
இவ்வளவு வசதிகள் இருந்தும் மக்கள் பணத்தைத் திருடி, உலக மகாத் திருடன் என சர்வதேச ரீதியில் அடையாளப்படுத்தப்பட்ட அவரை சட்டம் விரட்டிப் பிடித்தது.
இருந்த போதிலும், ‘தங்கத் தட்டில் பிறந்த’தற்கான அறிகுறிகள் நஜிபை விட்டு அகலவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர் குற்றவாளிதான் என நாட்டின் எல்லா நிலைகளில் உள்ள நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கிய போதிலும் கடைசியில் சொகுசான வாழ்க்கையைதான் இப்போது அனுபவிக்கிறார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் நஜிபுக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. எனினும் 2 ஆண்டுகள் கழித்து அவருக்கு வழங்கப்பட்ட அரச மன்னிப்பில் அந்த சிறைத் தண்டனை 6 ஆண்டுகளாகவும் அபராதம் 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைக்கப்பட்டது.
‘மேகா’ திருட்டில் ஈடுபட்ட போதிலும் இப்படிப்பட்ட சலுகைகளை அனுபவிக்கும் நஜிப் உண்மையிலேயே ‘தங்கத் தட்டில் பிறந்த’வர்தான் என வெகுசன மக்கள் எண்ணியிருந்த வேளையில் மற்றொரு அதிர்ஷ்ட தேவதை அவருடைய கதவைத் தட்டினார்.
ஏற்கெனவே அவருக்கு விதிக்கப்பட்ட 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்தினால் உடனே இல்லம் திரும்பி வீட்டுக் காவலில் இருக்கலாம் என கடந்த மாதம் பேரரசர் செய்த திடீர் அறிவிப்பு நஜிபுக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.
அந்த 50 மில்லியன் ரிங்கிட்டை கூட அம்னோ தனது உறுப்பினர்களிடமிருந்து திரட்டிக் கொடுத்தது. ஒரு சல்லிக் காசு கூட நிஜிப் தனது கணக்கில் இருந்து எடுத்துக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
வீட்டுக் காவல் என்பது, நம் நாட்டின் வரலாற்றில் இல்லாத ஒன்று. இப்படிப்பட்ட ஒரு சலுகையை நஜிப்தான் முதன் முதலில் அனுபவிக்கிறார். அவருக்கென்றே இந்த புதிய நடைமுறை அமலாக்கம் காண்கிறது.
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் வீட்டுக் காவலில் இருந்த மியன்மார் நாட்டு ஜனநாயக போராட்டவாதியான ஆங் சான் சூ கி அனுபவித்த சோகங்களுக்கும் வீட்டுக் காவலில் நஜிப் அனுபவிக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் ‘ஏணி வைத்தாலும் எட்டாது.’
சூ கியின் வீட்டைச் சுற்றிலும் சுமார் 300 மீட்டர் தொலைவில் அந்நாட்டு ராணுவத்தினர் சாலைத் தடுப்புகளை எழுப்பியிருந்தனர். யாருமே கிட்டே செல்ல முடியாது. தனது வீட்டிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் அனேகமாகக் காடுகளையும் ராணுவத்தினரையும் மட்டும்தான் அவர் பார்த்திருக்க இயலும். சிறைச் சாலையை விட மோசமான சூழல் என்று கூட சொல்லலாம்.
அதற்கு நேர்மாறாக, சொகுசான வாழ்க்கையை நஜிப் அனுபவிக்கிறார். வீட்டைச் சுற்றி ராணுவமோ காவல் துறையினரோ குவிக்கப்படவில்லை. அவருடைய சொகுசு பங்களா வழியாக பயணம் செய்வதற்கு யாருக்கும் தடையில்லை.
ஆக, இவற்றையெல்லாம் பார்க்கும் போது, நஜிப் ‘தங்கத் தட்டில் பிறந்த’வர் போல நடத்தப்படுவது, நாட்டை நேசிக்கும் குடிமக்களுக்கு சகிக்க இயலாத அவமானமாகும்.
























