ஆட்சிக் குழுவில் 2 இந்தியர்களா, அதன் ஆளுமை அதிக பயனை அளிக்குமா?

இராகவன் கருப்பையா – எதிர்வரும் சனிக்கிழமை, ஆகஸ்ட் முதல் தேதியில் நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றிபெற்றால் இரு இந்திய பிரதிநிதிகள் ஆட்சிக் குழுவில் இடம்பெறுவார்கள் எனும் அறிவிப்பு எத்தனை பேரை சந்தோஷப்படுத்தியிருக்கும் என்று தெரியாது.

சில தினங்களுக்கு முன் துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட் இந்த அறிவிப்பை செய்த போது ம.இ.கா. மகிழ்ச்சியடைந்திருக்கும். ஆனால் பொது மக்களில், குறிப்பாக அங்குள்ள வாக்காளர்களில் எத்தனை பேர் துள்ளிக் குதித்தார்கள் என்று தெரியவில்லை.

போட்டியிடும் வேட்பாளர்கள் ‘வை.பி.'(YB) எனப்படும் ‘யாங் பெர்ஹொர்மாட் (Yang Berhormat) நிலையை அடைவதற்குதான் துடிக்கிறார்களேத் தவிர எத்தனை பேர் மக்களுக்குத் தேவையான சேவைகளை ஆக்ககரமாக நிறைவேற்றுகிறார்கள் என்பது கேள்விக்குறியே.

வாக்களித்து ஏமாந்து போன பொது மக்களின் சோகக் கதைகள் ஏராளம். ஆட்சிக் குழுவில் 2 பேர் இடம்பெற்றால் மட்டும் ஒரே இரவில் நிலைமை மாறிவிடுமா என்ன! இருவர் நியமனம் பெற்றால் இரட்டிப்பு சேவையா மக்களுக்குக் கிடைக்கும்? கிடைக்க வேண்டுமே!

ஜெயித்த பிறகு அந்த மக்கள் பிரதிநிதிகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடிந்தாலே அது பெரிய விஷயம். தொடர்பு கிடைப்பதே ‘குதிரை கொம்பாகிவிடும்,’ பல வேளைகளில் அவர்ளுடைய செயலாளர்களோ, உதவியாளர்களோ, அலுவலக பணியாளர்களோதான் பதிலுரைப்பாளர்கள். அவர்களில் பலர் எதிர்முனையில் ‘வை.பி.’யை விட பந்தாவாக பேசுவார்கள்.

சில சமயங்களில் சாமானிய மக்களை, குறிப்பாக நகர்புறங்களுக்கு அப்பாலிருந்து அலுவலகம் நாடி வரும் சாமானிய மக்களை அவர்கள் படுத்தும் பாடு சொல்லில் அடங்காது.

“வை.பி. வெளியே போய்விட்டார். வை.பி.க்கு இன்று முக்கியமானக் கூட்டம். வை.பி.யை இன்று பார்க்க முடியாது. வை.பி. இன்று விடுப்பில் இருக்கிறார். வை.பி. வெளிநாடு சென்றுவிட்டார். நீங்கள் எங்கள் தொகுதியைச் சேர்ந்தவர் இல்லை. உங்கள் தொகுதிக்குதான் நீங்கள் செல்ல வேண்டும்.” இப்படியாக எண்ணற்ற பதில்கள் அவர்களை அலங்கோலப்படுத்தும்.

ஒரு சில வேளைகளில் அவை உண்மையாகக் கூட இருந்தாலும், உதவி நாடி வருவோருக்கு முறையான வழிகாட்டுதல் கிடைப்பதில்லை. அவர்களுக்கு வீண் அலைச்சல்தான் மிஞ்சும்.

மற்ற பல வேளைகளில் அரசாங்க அனுகூலங்களைப் பெறுவதற்கு பாரங்களை பூர்த்தி செய்துவிட்டு இவர்களிடம் கையெழுத்து வாங்கவேண்டிய சூழலும் ஏற்படும். அத்தகையத் தருணங்களில் கூட அவர்களிடம் பரிவு காட்டப்படுவதில்லை.

இத்தகைய குளறுபடிகள் வீணே திரிக்கப்பட்டதாகக் கருதக் கூடாது. ஊடகங்களுக்குக் கிடைத்த புகார்களை அடிப்படையாகக் கொண்டுதான் இங்கே குறிப்பிடப்படுகிறது.

இதற்கிடையே அத்தி பூத்தாற் போல மக்களுடன் அணுக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, களமிறங்கி சிறப்பாக சேவையாற்றும் மக்கள் பிரதிநிதிகளும் நம்மிடையே இருக்கவே செய்கின்றனர்.

உதாரணத்திற்கு பினேங் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சுந்தரராஜு, பஹாங் மாநில சபாய் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாச்சி துரைராஜு போன்றோரை குறிப்பிடலாம். இவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வது சுலபமாகவும் ஆக்ககரமாகவும் இருக்கும்.

இவ்விஷயத்தில் சிலாங்கூர், கிளேங் தொகுதியின் கணபதிராவ், பேராக், ஈப்போ பாராட் உறுப்பினர் குலசேகரன் மற்றும் பினேங் மாநிலத்தின் ஜெலுத்தோங் தொகுதி உறுப்பினர்  நேத்தாஜி ராயர், ஆகியோரின் மக்கள் தொடர்புகளும் பாராட்டத் தக்கவைதான்.

எனவே, இருவருக்கு ஆட்சிக்குழு பதவி கிடைக்கும் எனும் துணைப் பிரதமரின் அறிவிப்பில் உந்தப்பட்டு உற்சாகமடைந்து கண்மூடித்தனமாக மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதெல்லாம் காலம் கடந்த ஒன்று.

இனிமேலும் அதற்கான வாய்ப்பே இல்லை என்று அஹ்மட் ஸாஹிட்டுக்கு தெரிந்திருக்க வேண்டும். நம் சமூகம் காலங்காலமாக பலவகையான வெற்று வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துபோனதுதான் மிச்சம்.

கடந்த 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற 15ஆவது பொதுத் தேர்தலில் நம் சமூகம் சரியான பாடம் கற்றுக் கொண்டது என்றுதான் சொல்லவேண்டும். இனிமேலும் அவர்கள் ஏமாறமாட்டார்கள்.

வாக்காளர்கள் விழித்துக் கொண்டார்கள். கட்சிக்காக வாக்களிக்காமல், வேட்பாளர் எந்தக் கட்சியைச் சார்ந்திருந்தாலும், சிறந்த சேவையாளருக்காகத்தான் இனிமேல் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.