நமது குணாளனை பாராட்டிய இங்கிலாந்தின் கெவீன் கீகன்

இராகவன் கருப்பையா- “உங்கள் தேசிய குழுவில் விளையாடும் அந்த 6 அடி உயரமுடைய இந்திய இளைஞர் மட்டுமே எங்களுடைய கால்பந்து ‘கிளப்’பிற்கு(Club) வியாடத் தகுதியும் திறமையும் உள்ள ஒரே விளையாட்டாளர்,” என கடந்த 1980ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து குழுவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய கெவின் கீகன் குறிப்பிட்டது வரலாற்றுப்பூர்வமான ஒன்றாகும்.
அந்த காலக்கட்டத்தில் மலேசிய கால்பந்து குழுவின் தற்காப்பு ஆட்டக்காரராகக் கோலோச்சிய குணாளனை அப்படி அவர் குறிப்பிட்டது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயம்.
1970ஆம் ஆண்டுகளில் தேசிய குழுவிற்கு விளையாடிய தலைச் சிறந்த தற்காப்பு ஆட்டக்காரர்களான சந்தோக் சிங் மற்றும் சோ சின் ஆன் ஆகியோரைப் போலவே குணாளனும் அதீதத் திறமையைக் கொண்டிருந்தார்.
இந்த வட்டாரத்தின் முன்னணி தாக்குதல் ஆட்டக்காரர்கள் பலரும் அவரைத் தாண்டிச் சென்று கோல் புகுத்துவதில் பெருத்த சவாலை எதிர்நோக்கிய காலக்கட்டம் அது.
கடந்த 1984ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற மெர்டேக்கா கிண்ண கால்பந்து போட்டிகளுக்கு மலேசிய குழுவை தயார் செய்யும் பொருட்டு ஒரு பிரத்தியேக பயிற்சியாளராக கெவின் கீகன் இங்கு வரவழைக்கப்பட்டார்.
அந்த போட்டிகளின் போது குணாளன் வெளிப்படுத்திய மன உறுதியையும் விடா முயற்சியையும் பாராட்டிப் பேசிய போதுதான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
முன்னதாக கடந்த 1970களின் தொடக்கத்தில் ‘லிவர்பூல்’ குழுவிற்கு விளையாடிய கெவின் கீகன், 1978ஆம் ஆண்டும் அதற்கடுத்த ஆண்டும் ஐரோப்பாவின் சிறந்த கால்பந்து வீரராக இரு முறை தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து குழுவின் கேப்டனாக மட்டுமின்றி பிற்காலத்தில் அதன் நிர்வாகியாகவும் அவர் பங்காற்றியுள்ளார்.
உலகின் தலைச்சிறந்த கால்பந்து ஜாம்பவான் ஒருவரின் பாராட்டுதலைப் பெற்ற குணாளனின் நிலை உடனே அடுத்தக் கட்டத்திற்கு உயரும் என்று அப்போது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதன் பிறகு தேசிய குழுவில் அவரை பார்க்க முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்றும் தெரியவில்லை.
இதற்கிடையே சிறிது காலம் நோயுற்றிருந்த கெவின் கீகன், சில தினங்களுக்கு முன் தமது 75ஆவது வயதில் மரணமடைந்தது இங்கிலாந்து மட்டுமின்றி உலகக் கால்பந்துத் துறைக்கும் பேரிழப்பாகும்.