குழப்பம் நிறைந்த சூழலில் மலேசிய அரசியல் அரங்கம்

இராகவன் கருப்பையா – ‘எல்லாம் நாடக மேடை, இதில் எங்கும் நடிகர் கூட்டம். உருவம் தெரிவது போல, அவர் உள்ளம் தெரிவது இல்லை,’ எனும் பாடலுக்கு ஏற்ப நம் நாட்டின் அரசியல் அரங்கம் தற்பொழுது மிகவும் பரபரப்பாக உள்ளது.

இந்தச் சூழலுக்கு பிரதானக் காரணம், பட்டம், பதவி, பணம், புகழ், போன்ற அம்சங்களால் உந்தப்பட்டுள்ள சில அரசியல்வாதிகளின் பேராசைதான் என்றால் அது மிகையில்லை.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த மாதம் பிடித்த இந்த ‘அரசியல் தீ’ தற்பொழுது ஜொகூர் மாநிலத்திற்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

தேவையே இல்லாமல், அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை எந்நேரத்திலும் முடுக்கிவிடும் அளவுக்கு நிலைமை தற்பொழுது முன்னேறிக் கொண்டிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் பொது மக்களுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இன்னும் தவணை காலம் முடியாத பட்சத்தில், குறிப்பிட்ட சில அரசியல்வாதிகளின் இந்த பேராசையினால் மக்களின் வரிப் பணத்திற்குத்தான் கேடு.

கடந்த ஏப்ரல் மாத பிற்பகுதியில் அம்னோவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மந்திரி பெசாருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த அரசியல் குழப்பம் வெடித்தது.

பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த அமினுடினின் ஆட்சியைக் கவிழ்த்த இந்த சதி நாடகத்திற்கு அம்னோ துணைத் தலைவர் முஹமட் ஹசான்தான் காரணம் என ஜ.செ.க. இளைஞர் பகுதித் தலைவர் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், “எல்லாத் தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்,” என அம்னோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

எனவே பி.கே.ஆர்., ஜ.செ.க. மற்றும் அமானாவை பங்காளிகளாகக் கொண்டுள்ள பக்காத்தான் ஹராப்பான், அம்னோவுடன் நேரடியாக மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலைதான் ஜொகூர் மாநிலத்திலும் ஏற்பட்டுள்ளது. அம்னோவின் மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் மாநில ஆட்சியைக் கலைத்துவிட்டு, “எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எல்லா தொகுதிகளிலும் போட்டியிடுவோம்,” என அறிவித்தார்.

அதுமட்டுமின்றி, தேவையில்லாமல் ஜ.செ.க.வை வம்புக்கு இழுத்து, சற்றுத் திமிரான கருத்துகளை உமிழ்ந்து, அம்னோவின் பழைய சுய ரூபத்தைக் வெளிக் கொணர்ந்துள்ளார்.

“ஜ.செ.க.வுடன் ஒரே மேடையில் அமர்ந்திருப்பதைவிட எனது மந்திரி பெசார் பதவியை நான் துறந்துவிடுவேன்,” என்று கருத்துரைத்து தன்னை ஒரு பெரிய ‘ஹீரோ’வாகக் காட்டிக் கொள்ள அவர் முனைந்துள்ளார்.

இந்த 2 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கும் மக்களின் வரிப் பணமான குறைந்தது 167 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதுவெல்லாமே அடுத்த பொதுத் தேர்தலை முடுக்கிவிட்டு மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றுவதற்கான அம்னோவின் முதல் கட்டத் திட்டங்கள்தான் என்று யாருக்குத்தான் தெரியாது?

பிரதமர் அன்வாரை தலைவராகக் கொண்ட பக்காத்தான் அரசாங்கத்தில் 2ஆம் நிலையில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.

கடந்த காலங்களைப் போல தாங்களே பிரதமர் பதவியில் அமர்ந்து நாட்டை தனித்தே ஆட்சி புரிய திட்டமிடுகின்றனர் என அரசியல் பார்வையாளர்களும் கூட கருதுகின்றனர்.

பி.கே.ஆர். கட்சியும் ஜ.செ.க.வும் என்றும் இல்லாத அளவுக்கு மக்களின் ஆதரவை கணிசமாக இழந்துள்ளன என்பதை நன்கு உணர்ந்து, ‘குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறது’ அம்னோ என்பதும் எல்லாருக்கும் தெரியும்.

ஆனால் அந்த குழப்பத்தில் தங்களுக்கு ஆதரவு குவியும் என்று அம்னோ எதிர்பார்தால் அதுவும் கூட வெறும் பகல் கனவுதான். வாக்காளர்கள் முன்பு போல் இல்லாமல் தற்பொழுது விழித்துக் கொண்டார்கள் என்பது அம்னோவுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

அம்னோவின் ஆதிக்கம் முன்னாள் பிரதமர் நஜிப்பின் காலத்தோடு முடிந்துவிட்டது என்பதே பலருடைய பொதுவான கருத்தாகும். அவருடைய ‘மேகா’ ஊழல்கள் அக்கட்சியை படுபாதாளக் குழிக்குள் தள்ளிவிட்டது.

இதற்கிடையே எதிர்கட்சிகளின் கூட்டணியான பெரிக்காத்தானும் இத்தருணத்தில் சிதறிக்கிறது என்பதால் தேசிய நிலையிலான அரசியல் குழப்பம் விரிவடைந்துள்ளது. அக்கூட்டணியில் தொடக்கம் முதல் ஒற்றுமையாக இருந்த பாஸ் கட்சியும் பெர்சத்தும் தற்போது எதிரும் புதிருமாக நிற்கின்றன.

பெர்சத்துவிலிருந்து நீக்கப்பட்ட அதன் முன்னாள் துணைத் தலைவர் ஹம்ஸாவும் அவருடைய ஆதரவாளர்களும் ‘வவாசான்’ எனும் புதிய கட்சியொன்றை கையகப்படுத்தி பாஸ் கட்சியுடன் கூட்டுச் சேருவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல பாஸ் கட்சியும் அம்னோவும் கூட்டணிச் சேருவதற்கான முயற்சிகளும் திரைமறைவில் அரங்கேறியுள்ளதைப் போல் தெரிகிறது.

இதற்கிடையே பெரிக்காத்தானில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் எ.ஐ.பி.பி.(MIPP) எனும் ஒரு சிறிய கட்சியை அஹ்மட் ஸாஹிட் தலைமையிலான தேசிய முன்னணி தன் வசம் இழுக்க முற்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்திய வாக்காளர்களை அதிக அளவில் கவர்ந்திழுக்க ம.இ.கா.விடம் சக்தி இல்லை என்பதை அஹ்மட் ஸாஹிட் நன்கு உணர்ந்துள்ளார்  என்பதையே இது காட்டுகிறது.

இதனிடையே முன்னாள் சுங்கை சிப்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தலைமையிலான பி.எஸ்.எம். கட்சியும் மூடா கட்சியும் ‘முன்னேற்ற அணி’ எனும் ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலில் களம் காணத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய குழப்பங்களுக்கிடையே, ‘பெர்சமா’ எனும் ஒரு கட்சியை கையகப்படுத்தியுள்ள, பி.கே.ஆர். கட்சியில் இருந்து வெளியேறிய அதன் முன்னாள் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லியும் முன்னாள் உதவித் தலைவர் நிக் நஸ்மியும் மலேசிய அரசியலில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் இளைஞர் படையைத் திரட்டி உறுப்பியத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள அக்கட்சிக்கு கணிசமான அளவு ஆதரவு பெருகி வருவதாகத் தெரிகிறது.

இச்சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் எண்ணத்தில் அக்கட்சியுடன் கூட்டுச் சேர முனைந்த அமானா கட்சியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதும் வியப்பில்லை. பூவோடு சேர்ந்து மணக்கத் துடிக்கும் நாரின் கதைதான் இது.

இப்படியாக நாட்டின் அரசியல் சூழல் என்றும் இல்லாத அளவுக்கு தற்பொழுது மிகப் பெரிய பதவிப் போராட்டத்தை முடுக்கிவிட்டுள்ளதை நம்மால் காண முடிகிறது.