பினாங்கு பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து இடிபாடுகள் விழுந்து 2 சுற்றுலாப் பயணிகள் காயம்

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஆர்மேனியன் ஸ்திரீட் பகுதியில் உள்ள ஒரு பாரம்பரியக் கட்டிடத்திலிருந்து விழுந்த இடிபாடுகள் தாக்கியதில் இலங்கைச் சுற்றுலாப் பயணிகள் இருவர் காயமடைந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் முகமது அம்டார் (66), பாத்திமா (55) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு உதவி இயக்குநர் ஜான் சாகுன் பிரான்சிஸ் தெரிவித்தார். அவர்கள் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அந்தச் சுற்றுலாப் பயணிகள் நாளை இலங்கை திரும்பத் திட்டமிட்டிருந்ததாக ஜான் கூறினார்.

முதல் தளத்தின் உத்தரத்திலிருந்து விழுந்த கற்கள் மற்றும் மரக்கட்டைகளே அந்த இடிபாடுகளில் அடங்கும் என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட அந்தக் கட்டிடத்தின் தரைத் தளத்தில் ஒரு மளிகைக் கடை இயங்கி வருகிறது, அதே வேளையில் மேல் தளம் ஆள் நடமாட்டமின்றி காலியாக இருப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாரம்பரியக் கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ளுமாறு பினாங்கு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.

மாநில சுற்றுலாத் குழுத் தலைவர் வோங் ஹான் வாய் கூறுகையில், மாநிலத்தில் உள்ள பாரம்பரியக் கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு இந்த பாதுகாப்பு ஆலோசனையை வழங்குமாறு ஜார்ஜ் டவுன் உலக பாரம்பரிய நிறுவனம் மற்றும் பினாங்கு தீவு மாநகராட்சி ஆகியவற்றைக் கேட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, பழைய மற்றும் பாரம்பரியக் கட்டிடங்களின் கட்டமைப்புப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது என்றும் அவர் கூறினார்.

இன்றைய சம்பவத்தில் தொடர்புடைய கட்டிடத்துடன் மட்டும் நம் கவனம் நின்றுவிடக் கூடாது. அனைத்து பாரம்பரிய மற்றும் பழைய கட்டிடங்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய அவை சோதிக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை பாதசாரிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடும், என்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தச் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய, அதிகாரிகளின் முழுமையான அறிக்கைக்காக மாநில அரசு காத்திருப்பதாக வோங் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இரண்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் உடனடியாக உதவிகள் வழங்கப்படும் என்றும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை ஒருங்கிணைப்பதற்காக கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை மாநில அரசு தொடர்பு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

 

-fmt