இராகவன் கருப்பையா – தமிழ் நாட்டு மாநில சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்தாலின் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான போது இங்குள்ள நம் சமூகத்தைச் சார்ந்த பலர் பரபரப்பாகி பதற்றமடைந்தது முற்றிலும் அறிவிலித்தனமான ஒரு நிலை என்றே சொல்ல வேண்டும்.
பெண்களை அனாவசியமாக இழிவுபடுத்தி நையாண்டியாக பேசிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது.
தமிழ் நாட்டில் இது போன்ற அக்கிரமங்கள் காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஒரு அரசியல் கூத்து என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
ஆனால் அதன் தொடர்பான செய்திகளை இங்குள்ள பலர் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிர்ந்த விதம் நமக்கு வியப்பாக இருக்கிறது என்பதை விட எரிச்சலூட்டியது என்றே சொல்ல வேண்டும்.
“தமிழ்நாட்டுல உதயநிதி ஜெயிலுக்கு போனா என்ன, வேறு எங்கு வேண்டுமானாலும் போகட்டுங்க. அதனால நமக்கு என்னங்க ஆகப் போகுது?” என்று விவேக சிந்தனையுடன் கேட்பவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றனர்.
எனினும் நேர மெனக்கட்டு அந்த சம்பவத்தைப் பற்றி புலனக் குழுக்களிலும் இதர வழிகளிலும் விரிவாக விவாதம் செய்து கொண்டிருப்பவர்களை என்னவென்று சொல்வதென்றே தெரியவில்லை.
தமிழகத்தில் வீணான அரசியல் விளம்பரம் தேடுவதற்கு அங்குள்ள அரசியல்வாதிகள் பலதரப்பட்ட யுக்திகளை கையாளுவார்கள். சிறை செல்வது அவற்றுள் ஒன்று. அதற்காக அவர்கள் வருத்தப்படுவது இல்லை. சந்தோஷமாக சிறை செல்வார்கள். அவர்களுக்கு அது கைவந்தக் கலை.
ஆர்ப்பாட்டம், சாலை மறியல், பந்த், போராட்டம், போன்ற விஷயங்கள் எல்லாம் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஒன்றித்த ஒரு விஷயம் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
நிலைமை இவ்வாறு இருக்க, நாம் ஏன் இங்கு அலட்டிக் கொள்ள வேண்டும்? உதயநிதி எங்கு சென்றால் நமக்கென்ன ஆகப் போகிறது? அதனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்நாட்டில் நமக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் காலங்காலமாக தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. அதைப் பற்றி பேசுவோமே! சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்வோமே! செய்வோமா?






















