நேற்று சுங்கை சிப்புட், போஸ் பெர்வோர், கம்பங் தாகுங் அருகிலுள்ள கொர்பு காப்புக் காட்டில் தனது நண்பருடன் பிரம்பு தேடிக் கொண்டிருந்தபோது, புலி தாக்கியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் ஓராங் அஸ்லி நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 42 வயதுடைய ஜாம்பேரி அங்கா, தாக்குதல் நடந்ததாகக் கருதப்படும் இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில், மரத்தடிகளை ஏற்றிச் செல்லும் சாலைக்கு அருகிலுள்ள மூங்கில் புதரில் இறந்து கிடந்ததாக லிந்தாங் சட்டமன்ற உறுப்பினர் ஸுல்காஃப்லி ஹாரூன் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 4.30 மணியளவில் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறைக்கு (பெர்ஹிலிட்டன்) தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து அதன் வனவிலங்கு பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களும், சுங்கை சிப்புட் பெர்ஹிலிட்டன் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட நபர் மாலை 6.58 மணியளவில் கண்டெடுக்கப்பட்டார், அங்கு புலியின் கால் தடயங்கள் மற்றும் சில சான்றுகள் காணப்பட்டன, என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சமூகத்தினர் தற்காலிகமாக காட்டுப் பகுதிக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாகவும், குடும்பத்தினருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பாதிக்கப்பட்டவரின் உடலின் புகைப்படங்களைப் பகிர வேண்டாம்.
இந்தச் சம்பவம் ஆழந்த வருத்தத்தை அளிக்கிறது மற்றும் அவரது குடும்பத்தினரையும் உள்ளூர் சமூகத்தையும் பெரிதும் பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் மனைவி மற்றும் குழந்தைகளை தாம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இந்த இழப்பைத் தொடர்ந்து அந்த குடும்பத்திற்குத் தேவையான உதவிகளையும் வழங்கியதாக ஸுல்காஃப்லி தெரிவித்தார்.
-fmt
























