கசிவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், சிறந்த நிர்வாகத்தின் மூலமும் சேமிக்கப்படும் நிதி மக்களுக்கே மீண்டும் வழங்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று ஒளிபரப்பப்பட்ட சிறப்பு நேர்காணலில் 2027ஆம் ஆண்டிற்கான கூட்டரசு வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹிம் உரையாற்றினார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிம் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2027ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின் மூலம் நாட்டின் அனைத்துப் பொருளாதாரச் சிக்கல்களும் தீர்ந்துவிடாது என்பதை இன்று ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், பொருட்கள் மற்றும் சில சேவைகளின் விலை உயர்வாலும் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று அவர் கூறினார்.
முறைகேடுகள் மற்றும் கசிவுகளைத் தடுப்பதன் மூலமும், சிறந்த நிர்வாகத்தின் மூலமும் சேமிக்கப்படும் நிதி மக்களுக்குத் திருப்பப்படும் என்று பட்ஜெட் குறித்து ஒளிபரப்பப்பட்ட சிறப்பு நேர்காணலில் அன்வார் கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கத் தலைமையிலான போரைத் தொடர்ந்து ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ மூடப்பட்டதால், இறக்குமதி செய்யப்படும் பாஸ்பேட் உரத்தின் விலை உயர்ந்ததை அவர் இதற்கு ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டடார்.
சரக்கு விலைகளின் ஏற்ற இறக்கங்கள், தளவாடக் கட்டணங்கள் மற்றும் சர்வதேச விநியோகச் சங்கிலி இடையூறுகள் ஆகியவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்றாலும், நிதி அழுத்தத்தைக் குறைக்க புத்ராஜாயா உதவ முடியும் என்று அன்வார் கூறினார்.
விநியோகச் சங்கிலியைச் சீரமைத்தல், உழவர் சந்தைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் கூட்டரசு விவசாய சந்தைப்படுத்தல் வாரியம் (FAMA) மூலமாகப் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பது ஆகியவை இதன் சில வழிகளாகும் என்று அவர் கூறினார்.
ஒழுக்கமான நிதி நிர்வாகத்தின் மூலம் வலுவான நிதி நிலையை அடைய முடியும் என்றும், இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுச் காலணிகள் வழங்குவதுடன், ரப்பர் சிறுதோட்ட உரிமையாளர்கள் மற்றும் நெல் விவசாயிகளுக்குப் படிகள் மற்றும் குறைந்தபட்ச வருமான ஆதரவு போன்ற உதவிகளை அரசாங்கம் வழங்க முடியும் என்றும் அன்வார் கூறினார்.
“நாம் நிதியைச் சரியாக நிர்வகித்து, அரசாங்கச் செலவினங்கள் உண்மையிலேயே இலக்கு வைக்கப்பட்ட குழுக்களைச் சென்றடைவதை உறுதிசெய்தால் இவை அனைத்தையும் சாதிக்க முடியும்,” என்று அவர் கூறினார்.
பொதுமக்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, மக்களின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதையே 2027 பட்ஜெட்டில் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ள திட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் அன்வார் கூறினார்.
“பொருளாதாரம் செழித்து வளரலாம், ஆனால் மக்கள் இன்னும் சுமையோடு இருக்கலாம். நாங்கள் முழுமையான அணுகுமுறையை எடுக்கிறோம், அடிப்படையில் ஒரு பட்ஜெட் என்பது இதைப் பற்றியதுதான்.”
2027 பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்ற குறிப்பிடத்தக்க விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், கிக் தொழிலாளர்களின் நலன் (gig workers), செல்லப்பிராணிகளின் நலன் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் போன்ற விஷயங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கூட்டரசு பட்ஜெட் மதிப்பீடுகள் மொத்தம் ரிம 460 பில்லியன் செலவினங்களை வழங்குகின்றன, இது 2026 மதிப்பீடுகளை விட ரிம 40 பில்லியன் அதிகரிப்பாகும்.























