சரவணனிடமிருந்து எனக்கு எந்தக் கடிதமும் கிடைக்கவில்லை. அந்த ஆவணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தட்டும்

பிரதமர் அன்வார் இப்ராஹிம், முன்னாள் மனிதவள அமைச்சரான தமக்கு வெளிநாட்டு ஊழியர் ஆட்சேர்ப்புத் திட்டத்தில் தொடர்பிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து ம.இ.கா துணைத் தலைவர் எம். சரவணனிடமிருந்து இன்னும் எந்தக் கடிதத்தையும் பெறவில்லை.

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின்படி, விசாரணை மற்றும் வழக்காடல் நடைமுறைகள் அந்தந்த அதிகார வரம்புகளின்படி நடப்பதை உறுதி செய்ய, அந்த ஆவணத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ய ஒப்புவிப்பதாக அன்வார் கூறினார்.

தனியாக, சினார் ஹரியான், அன்வார் கூறியதாக மேற்கோள் காட்டியது:

அது அவர்களை (அதிகாரிகளை) சென்றடைந்தவுடன், அது என் பொறுப்பு அல்ல. அந்தக் கடிதத்தை MACC (மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம்) அல்லது சட்டத்துறைத் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, அவர்கள் அதை ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்வேன்.

“விசாரணை மற்றும் வழக்காடல் தொடர்ந்து நடைபெற நாம் இடம் கொடுக்க வேண்டும்… மேலும் நீதிமன்றத்தால் முடிவு செய்யப்படும் வரை எதுவுமே உறுதியில்லை என்பதால் எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது,” என்று கூறினார்.

முன்னதாக, ஆகஸ்ட் 24-ஆம் தேதியிட்ட அக்கடிதத்தை ஆகஸ்ட் 26-ஆம் தேதி பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சரவணன் மலேசியாகினியிடம் தெரிவித்திருந்தார்.

நேற்று, மலேசியாகினி வெளியிட்டுள்ள செய்தியில், சரவணனின் கடிதத்தில், இரு தொழிலதிபர்கள் தமக்கு எதிராக குற்றஞ்சாட்டுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், தபாக் நாடாளுமன்ற உறுப்பினரான தமது மனைவியைக் கைது செய்வதாக MACC அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரிம 1.097 மில்லியன் லஞ்சக் குற்றச்சாட்டு

இன்று முன்னதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில், 2022ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்திற்கு புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை (quota) அங்கீகரிப்பதற்காக ரிம 1.097 மில்லியன் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் சரவணன் ஒப்புக்கொள்ளவில்லை.

ம.இ.கா துணைத் தலைவர் எம். சரவணன்

தனது நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய சரவணன், அன்வாருக்குத் தாம் எழுதிய கடிதத்தின் நோக்கம் தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்கக் கேட்பதற்கல்ல, மாறாக இந்த விவகாரம் வெளிப்படையாக விசாரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கே என்று வலியுறுத்தினார்.

கடந்த ஆறு மாதங்களாக அன்வாரிடம் இது குறித்துப் பேசி வருவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகள் “அவதூறானவை” என்ற கவலையை ஆரம்பத்திலிருந்தே எழுப்பி வருவதாகவும் சரவணன் கூறினார்.

பிரதமர் தனது “தலைவர்” என்பதால் தான் அவருக்குக் கடிதம் எழுதியதாக உறுதிப்படுத்திய ம.இ.கா தலைவர், தாம் மடானி அரசின் ஒரு பகுதி என்றும், அன்வார் பிரதமராக நியமிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் சேர்த்துக் கூறினார்.