ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் முழு சிறைத்தண்டனையையும் அனுபவிக்க வேண்டும்: பிகேஆர்

ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள், குறிப்பாக உயர்மட்ட வழக்குகளில் உள்ளவர்கள், தங்களது முழு தண்டனைக் காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹரப்பான் கோரிக்கை விடுத்துள்ளது.

நள்ளிரவுக்குப் பிறகு அதன் செயலகக் குழு வெளியிட்ட அறிக்கையில், ஊழல், முறைகேடுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான மதானி அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவிப்பதாக பாக்காத்தான் ஹரப்பான் கூறியுள்ளது.

மேலும், இத்தகைய வழக்குகள் குறித்து எவ்வித சமரசமும் இன்றி “முழுமையாக” விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய பேரரசரின் (யாங் டி-பெர்துவான் அகோங்) அழைப்பை பாக்காத்தான் ஹரப்பான் நிலைநிறுத்துவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பத்திலிருந்தே நிறுவன சீர்திருத்தங்கள், நல்லாட்சி மற்றும் ஊழலை நிராகரித்தல் ஆகியவற்றை முன்னிறுத்தி வரும் ஒரு கூட்டணி என்ற முறையில், ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோக வழக்குகளில் தண்டனை பெற்ற எந்தவொரு நபரும், குறிப்பாக உயர்மட்ட வழக்குகளில் உள்ளவர்கள், நீதிமன்றம் விதித்த தண்டனையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்று பாக்காத்தான் ஹரப்பான் கருதுகிறது.

தற்போது நடைபெற்று வரும் நீதித்துறை செயல்முறைகள், பிற காரணிகளின் தாக்கம் இருப்பதாக எவ்வித ‘எதிர்மறை எண்ணத்தையும் அல்லது தோற்றத்தையும் ஏற்படுத்தாமல்’ அதன் போக்கிலேயே இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இத்தகைய வழக்குகள் கையாளப்படும் விதத்தைப் பொறுத்தே தேசிய நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை அமைந்துள்ளது என்றும், இதற்கு முன்பு நடந்த உயர்மட்ட ஊழல் வழக்குகள் சர்வதேச அளவில் மலேசியாவின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

உயர்மட்ட வழக்குகளில் எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், இந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதில் நாட்டின் தீவிரத்தன்மை குறித்து பொதுமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் கணக்கில் கொள்ள வேண்டும்.

நெருக்கடிகளுக்கு உள்ளாகும்போதும் கூட, சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுக்கான தனது அர்ப்பணிப்பை பாக்காத்தான் ஹரப்பான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அறிக்கையில் எந்தவொரு குறிப்பிட்ட வழக்கின் பெயரோ அல்லது நபரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், 1MDB ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சிறையிலிருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தனது தண்டனையிலிருந்து பொதுமன்னிப்புப் பெற விடுத்திருக்கும் கோரிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை பரிசீலிப்பதற்காக, கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியம் (FTPB) செப்டம்பர் 11 அன்று கூடவுள்ளதாக வெளியாகியுள்ள அறிக்கைகளுக்கு மத்தியில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.

மாட்சிமை தங்கிய பேரரசர் தலைமையிலான கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியத்தில் (FTPB) இடம்பெற்றுள்ள கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பாக்காத்தான் ஹரப்பான் அதிபர்  குழுக் கூட்டத்தில் இது குறித்து விளக்கமளித்ததாக வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 42 மில்லியன் ரிங்கிட் நிதியை முறைகேடு செய்ததாக 72 வயதான நஜிப் மீது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும், 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அவர் ஆகஸ்ட் 23, 2022 முதல் காஜாங் சிறையில் தனது தண்டனையை அனுபவித்து வருகிறார்.

பின்னர் கூட்டரசு பிரதேச பொதுமன்னிப்பு வாரியத்தில் (FTPB) அவரது சிறைத்தண்டனையை ஆறு ஆண்டுகளாகப் பாதியாகவும், அபராதத்தை 50 மில்லியன் ரிங்கிட்டாகவும் குறைத்தது.

டிசம்பர் 2025-இல், 1MDB தொடர்புடைய 2 பில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி உள்ளடங்கிய அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 11.38 பில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து அவர் தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.

 

 

 

-fmt