ஹேஸ்: மலேசியா அதிகாரப்பூர்வமாக இந்தோனேசியாவுக்கு உதவி வழங்க முன்வந்துள்ளது; வழக்குத் தொடர்வதற்கும், குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குமான அளவுகோல்களைப் பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்

காட்டுத் தீ

மலேசியா, காட்டுத் தீயை எதிர்த்துப் போராட இந்தோனேசியாவுக்கு உதவி வழங்க அதிகாரப்பூர்வமாக முன்வந்துள்ளது. இதில் ஒரு Bombardier CL-415MP விமானம், மூன்று ஹெலிகாப்டர்கள் மற்றும் 52 பணியாளர்கள் அடங்குவர்.

பெர்சமா செய்தியின்படி, துணைப் பிரதமர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, இன்று ஜகார்த்தாவில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த உதவித் திட்டத்தை இந்தோனேசிய துணை அதிபர் கிப்ரான் ரகாபுமிங் ராகாவிடம் தெரிவித்தார்.

இந்தப் பணியாளர்கள் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம், மலேசிய கடல்சார் அமலாக்க நிறுவனம் மற்றும் மலேசிய விமானப்படை ஆகியவற்றிலிருந்து அனுப்பப்படுவர்.

“இந்த விவகாரம் இந்தோனேசிய அரசின் ஒப்புதலுக்காக அதிபர் பிரபோவோ சுபியாந்தோவிடம் சமர்ப்பிக்கப்படும்,” என்று ஜாஹித் தெரிவித்தார்.

ஜாஹித், செப்டம்பர் 20 வரை இந்தோனேசியாவில் நான்கு நாள் பணிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் போது நடைபெறும் ஐந்தாவது Halal 20 Summit மாநாட்டில் கலந்து கொண்டு, நாளைய தொடக்க நிகழ்விலும் பிராந்திய ஹலால் ஒத்துழைப்பு குறித்த அமர்விலும் உரையாற்ற உள்ளார்.

AirAsia

தொழில்துறை முழுவதும் நிலவும் சவால்களுக்கு மத்தியிலும் அடிப்படை பயணத் தேவை வலுவாக இருப்பதாகக் கூறி, தனது செயல்பாடுகளை நிலையாகத் தொடரவும் பிராந்திய விமான இணைப்பை விரிவுபடுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக AirAsia மீண்டும் தெரிவித்துள்ளது.

குழும தலைமை நிர்வாக அதிகாரி Bo Lingam, விமானப் போக்குவரத்து தரவு நிறுவனமான OAG வெளியிட்ட 2026 Megahubs அறிக்கையில், கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) உலகின் முன்னணி குறைந்த கட்டண விமானப் போக்குவரத்து மையமாக இடம்பெற்றதைத் தொடர்ந்து இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

அறிக்கையின்படி, KLIA-வில் AirAsia ஆதிக்கம் செலுத்தும் விமான நிறுவனமாக உள்ளது; விமான நிலையத்தில் நடைபெறும் மொத்த விமான சேவைகளில் 34% AirAsia-உடையவை.

AirAsia-வின் இன்றைய அறிக்கை, அதன் பெரிய உள்நாட்டு சந்தைப் பங்கைக் கருத்தில் கொண்டு மாற்று ஏற்பாடுகளுக்கான திட்டமிடலின் ஒரு பகுதியாக அரசாங்கம் Malaysia Airlines மற்றும் Batik Air ஆகியவற்றை அணுகியதாக Reuters செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து வந்துள்ளது.

இன்று AirAsia-வின் பங்குகள் ஒருகட்டத்தில் 21% வரை சரிந்து, 2022 டிசம்பர் முதல் காணப்படாத குறைந்தபட்ச நிலையை எட்டின. இதனால் இந்த ஆண்டின் தொடக்கம் முதல் அதன் பங்கு விலை சரிவு சுமார் 70% ஆக அதிகரித்தது. அதன் இணை நிறுவனமான Capital A-வின் பங்குகளும் ஒருகட்டத்தில் 18% வரை சரிந்தன.

AGC – சட்டத்துறைத் தலைமை அலுவலகம்

பல அரசு சாரா அமைப்புகள் (NGOs), குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வது மற்றும் வழக்குகளைத் தொடராமல் நிறுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை, குறிப்பாக தீர்ப்பளிக்காமல் விடுதலை (DNAA) கோரப்படும் அல்லது குற்றச்சாட்டுகள் திரும்பப் பெறப்படும் சூழ்நிலைகளில் பயன்படுத்தப்படும் அளவுகோல்களை, Attorney-General’s Chambers (AGC) பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்று கோரியுள்ளன.

முன்னாள் பிரதமர் முகிடின் யாசின், Bukhary Equity தொடர்பான ரிம 200 மில்லியன் விவகாரத்தில் சுமத்தப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டிலிருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவரின் அரசியல் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், ஒரே மாதிரியான மற்றும் வெளிப்படையாகத் தெரிவிக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் வழக்குத் தொடரும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும். அதுவே மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் நம்பகத்தன்மைக்கு முக்கியமானது.

“இது ஒரு கட்டமைப்பு ரீதியான பிரச்சினை என்பதால், கட்டமைப்பு ரீதியான தீர்வு தேவைப்படுகிறது. சட்டத்துறைத் தலைமை அதிகாரி (Attorney-General) மற்றும் பொது வழக்கறிஞர் (Public Prosecutor) பதவிகளைப் பிரிக்கும் சீர்திருத்தத்தை இந்த நாடாளுமன்றக் காலத்திலேயே நிறைவு செய்வதை, அரசியல் வசதிக்கான விஷயமாக அல்லாமல் நிறுவன ரீதியான அவசியமாக அரசாங்கம் கருத வேண்டும்,” என்று அந்த NGOs கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்ட அமைப்புகள்: Projek Sama, Bersih, Institute for Democracy and Economic Affairs (IDEAS), Center to Combat Corruption and Cronyism (C4 Center) மற்றும் Rasuah Busters.

விலங்கு உரிமைகள்

ஜப்பானின் ஒசாகாவில் உள்ள டென்னோஜி மிருகக்காட்சிசாலையில் (Tennoji Zoo) இருக்கும் மூன்று மலேசிய யானைகளின் உடல்நிலையை உடனடியாகப் பரிசோதிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று MCA Youth வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக Kelat என்ற யானை எடை இழந்துள்ளதாக எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

MCA Youth தகவல் பிரிவு தலைவர் நியோ சூ சியோங் (Neow Choo Seong), தைப்பிங் நகராட்சி மன்றமும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சும் 14 நாட்களுக்குள் ஒரு சுயாதீன மலேசிய கால்நடை மருத்துவக் குழுவை அனுப்பி கெலாட், தாரா மற்றும் அமோய்( Kelat, Dara, Amoi )ஆகிய மூன்று யானைகளையும் பரிசோதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

நியோ வெளியிட்ட அறிக்கையில், இந்த யானைகளின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஜூன் 22 அன்று 250 கிலோமீட்டர் தனிப்பயண ஓட்டத்தை நிறைவு செய்ததிலிருந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கடந்துவிட்டதாகக் குறிப்பிட்டார்.

DAK என்று கூட்டாக அழைக்கப்படும் இந்த மூன்று யானைகளும் மார்ச் 11 அன்று  தென்னோஜி மிருகக்காட்சிசாலைக்கு(Tennoji Zoo) மாற்றப்பட்டன.

யானைகளின் உடல் நிலை, மனஅழுத்த அளவு, உணவு, அடைப்பிடம் மற்றும் தனிமைப்படுத்தப்படும் காலங்கள் ஆகியவற்றை மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், அதன் முடிவுகள், காணொளிகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகளை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் என்றும்  நியோ கோரியுள்ளார்.

மேலும், யானைகளை ஜப்பானில் வைப்பதற்கான ஒப்பந்தத்தையும் அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், குறிப்பாக அவற்றை மீண்டும் மலேசியாவுக்கு அழைத்து வருவது மற்றும் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான விதிகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.