மருத்துவமனை கட்டுவதற்கு உகந்த நிலம் பெட்டாலிங் ஜெயாவில் மிக வேகமாக குறைந்து வருகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
எனவே, இந்த நகரில் ஒரு பொது மருத்துவமனையை எங்கு அமைப்பது என்று முடிவு செய்யும்போது, செலவினங்களை மட்டுமே முக்கிய காரணியாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் கூறியுள்ளார்.
இப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்தும், பெட்டாலிங் ஜெயாவிற்கு என்று இன்னும் ஒரு பொது மருத்துவமனை இல்லை. இந்த நிலையில், அங்கு நிலத்தை விலைக்கு வாங்குவதற்கு அதிக செலவாகும் பட்சத்தில், ‘நிலப் பரிமாற்றம்’ போன்ற மாற்று வழிகளை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று லீ தெரிவித்தார்.
அதே நேரத்தில், மக்களின் உயிரையும் நல்வாழ்வையும் வெறும் செலவுக் கணக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிட முடியாது,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2020ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 362,290 மக்கள் தொகையைக் கொண்ட பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்றத் தொகுதி, நாட்டின் மிக நெருக்கமான நகர்ப்புறப் பகுதிகளில் ஒன்றாகும்.
தற்போது, பெட்டாலிங் ஜெயா குடியிருப்பாளர்கள் கோலாலம்பூர் மருத்துவமனை, ஷா ஆலம் மருத்துவமனை, சுங்கை புலோ மருத்துவமனை மற்றும் செர்டாங்கில் உள்ள சுல்தான் இத்ரிஸ் ஷா மருத்துவமனை உள்ளிட்ட அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். இவை அனைத்தும் இந்த நகரத்தின் நிர்வாகப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ளன.
மக்கள் தொகை அடர்த்தி மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், இது அரசு கிளினிக்குகள் உள்ளிட்ட தற்போதைய சுகாதார வசதிகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக லீ கூறினார்.
சுமார் 1.2 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பெட்டாலிங் ஜெயா, சுபாங் மற்றும் புச்சோங் குடியிருப்பாளர்களுக்குச் சேவை செய்ய ஒரு அரசு மருத்துவமனைக்கான நிலத்தைப் பெற மாநில அரசால் இயலவில்லை என்று கடந்த வாரம் சிலாங்கூர் பெர்சத்து இளைஞர் பிரிவு கேள்வி எழுப்பியது.
சிலாங்கூர் அரசுக்கு மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் காவல் நிலையங்கள் போன்ற பொது நலன் சார்ந்த நோக்கங்களுக்காக, தனியாருக்குச் சொந்தமான நிலங்களை கையகப்படுத்தும் அதிகாரம் 1960 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் உள்ளது என்று சிலாங்கூர் பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் நைம் பிரண்டேஜ் (Na’im Brundage) தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயா, சுபாங் மற்றும் புச்சோங் பகுதி மக்களுக்குச் சேவை செய்யும் வகையில், அங்கு ஒரு பொது மருத்துவமனை அமைக்க சிலாங்கூர் மாநில அரசும் சுகாதார அமைச்சும் “பொருத்தமான நிலத்தைத் தேடி வருகின்றன” என்று சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருதின் ஷாரி த்ரெட்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் விதமாகவே நைம் இவ்வாறு கூறினார்.
-fmt
























