பிரதமர் அன்வார் இப்ராகிம், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட 7,000-க்கும் அதிகமான வேலைவாய்ப்பு இழப்புகளை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள் அரசாங்கம் அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளில் மாற்று வேலைவாய்ப்பு வசதிகளை வழங்குவதும் அடங்கும்.
“இவ்விவகாரம் சமீபத்திய தேசிய பொருளாதார நடவடிக்கை குழு கூட்டத்தில் எழுப்பப்பட்டது. சூழ்நிலையை மேம்படுத்தவும், மாற்று வேலைகளை வழங்கவும் நான் தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்,” என்று அவர் இங்குள்ள பெனாந்தியில் நடைபெற்ற ஹரிராயா குர்பான் நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நேற்று, பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா நாசிர், கடந்த மார்ச் மாதத்தில் 5,855 ஆக இருந்த வேலைவாய்ப்பு இழப்புகள், ஏப்ரல் மாதத்தில் 21% அதிகரித்து 7,057 ஆக மலேசியாவில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வேலை இழந்தவர்கள் பெராக், பினாங்கு, கெடாவில் உள்ள குலிம் ஹை-டெக் பார்க், சிலாங்கூர், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களில் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடலாம் என்றும், இந்த மாநிலங்கள் சமீபத்தில் புதிய முதலீடுகளை ஈர்த்துள்ளன என்றும் அன்வார் கூறினார்.
அண்மையில் வேலை இழந்தவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், அவர்களுக்குத் தகுந்த பயிற்சி அளிப்பதற்கும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அவர் மேலும் கூறினார்.
அறிவிக்கப்பட்ட இந்த வேலைவாய்ப்பு இழப்புகள் கவலையளிக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, இது இன்னும் “அச்சமளிக்கும்” நிலையை எட்டவில்லை என்று அன்வர் கூறினார்.
“ஆனால் நாம் இதனைத் தனிப்பட்ட முறையில் உற்றுநோக்கினால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஏற்படும் வேலை இழப்பு என்பது நிச்சயமாக கவலைக்குரிய ஒன்றுதான். எனவே, எங்களால் இயன்றவரை சிறந்த முறையில் இதை எதிர்கொள்ள முயற்சித்து வருகிறோம்.”
-fmt
























