இராகவன் கருப்பையா- நாளை ஜூலை 11ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் தோல்வியடைந்தால் அந்த கூட்டணிக்கு அது மிகப் பெரியதொரு பின்னடைவை ஏற்படுத்துவது உறுதி.
அடுத்த பொதுத் தேர்தலில் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெற்று நாட்டை மீண்டும் வழிநடத்துவதே தேசிய முன்னணியின் பிரதானக் குறிக்கோள்.
சுருங்கக் கூறின், பிரதமர் பதவியை கைப்பற்றுவதே அம்னோ தலைமையிலான அந்தக் கூட்டணியின் நோக்கம். அதற்கான முதல்கட்ட நடவடிக்கைதான் இந்த ஜொகூர் மாநிலத் தேர்தல் என்று பலருக்கும் தெரியும்.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேல் ஒற்றுமை அரசாங்கம் எனும் பெயரில் அவ்விரு கூட்டணிகளும் கூட்டாக நாட்டை வழிநடத்துகின்றன.
புத்ரா ஜெயாவில் வாரம் ஒரு முறை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் போதும் ஒன்றாக அமர்ந்து ஒன்றுமையாக கலந்தாலோசித்து மகிழ்கின்றனர்.
ஆனால் ஜொகூர் தேர்தல் பிரச்சாரங்கள் என்று வரும் போது அவ்விரண்டு கூட்டணிகளைச் சேர்ந்த அமைச்சர்களும் இதர அரசியல்வாதிகளும் ஒருவருக்கொருவர் காரசாரமாகத் தாக்கி அறிக்கைகள் விடுக்கின்றனர்.
இந்தச் சூழலுக்கு வித்திட்டது அம்னோதான் என்று எல்லாருக்கும் தெரியும். மாநிலத்தின் எல்லா தொகுதிகளிலும் நாங்கள் தனித்து போட்டியிடப் போகிறோம் என்று அறிவித்து பக்காத்தானுக்கு அது சவால்விட்டது.
துணைப் பிரதமர் அஹ்மட் ஸாஹிட், வெளியுறவு அமைச்சர் முஹமட் ஹசான், முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் ஜொகூர் மந்திரி பெசார் ஒன் ஹஃபிஸ் உள்பட பல முன்னணி அரசியல்வாதிகள் பக்காத்தானை வசைப்பாடும் விதம் நமக்கு வியப்பாகத்தான் உள்ளது.
அதிகாரப் பூர்வமாக இல்லாவிட்டாலும், பாஸ் கட்சியும் பாசிசானும் கூட்டுச் சேர்ந்து பக்காத்தாளை வீழ்த்தத் திட்டமிட்டுள்ளதும் எல்லாருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இத்தகைச் சுழலில், பாரிசான்தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று பரவலாகக் கணிக்கப்பட்டுள்ளது. அந்த நம்பிக்கையில்தான் அக்கூட்டணியும் சற்று அகந்தையாகக் காணப்படுகிறது.
அப்படி ஒரு நிலை ஏற்படுமேயானால் பக்காத்தான், குறிப்பாக பிரதமர் அன்வார் தலைமையிலான பி.கே.ஆர். கட்சியும்எந்தனி லோக் தலைமையிலான ஜ.செ.க.வும் முழு பொறுப்பேற்க வேண்டும்.
சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜ.செ.க. படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, எந்தனி லோக் மற்றும் கோபிந் சிங் போன்ற அதன் தலைவர்கள் சற்று வீறுகொண்டு எழுந்ததைப் போல் தெரிந்தது.
இருந்த போதிலும் ஜொகூர் மாநிலத்திலும் அக்கட்சி மலாய்க்காரர் அல்லாதாரால், குறிப்பாக சீன சமூகத்தினரால், கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசாங்கத்தில் இணைந்ததிலிருந்து ஜ.செ.க. தனது கொள்கைகளை புறந்தள்ளி பி.கே.ஆர். கட்சியுடன் சோரம் போய்விட்டது என்பதே வாக்காளர்களின் ஆதங்கமாகும். அதில் ஓரளவு உண்மை இருப்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
அதே போல பி.கே.ஆர். கட்சி மீதும் மலாய்க்காரர் அல்லாதார் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளது ‘உள்ளங்கை நெல்லிக்கனி.’ கடந்த பொதுத் தேர்தலின் போது அன்வார் அளித்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் இருப்பதே அதற்கான காரணமாகும்.
Anak Melayu anak saya. Anak Cina anak saya. Anak India anak saya. Anak Kadazan anak saya.
(மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள், கடாஸான்கள், ஆகிய எல்லாருமே என் பிள்ளைகளைப் போல்தான்) என்று அவர் குறிப்பிட்ட போது நமக்கெல்லாம் இதமாகத்தான் இருந்தது. இப்படி ஒரு தலைவர்தான் நமக்குத் தேவை என்று எண்ணினோம்.
ஆனால் உண்மையில் நடப்பது என்ன? பல நிலைகளில் நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பல்கலைக்கழக மாணவர்களுடனான சந்திப்பின் போது இந்திய மாணவி ஒருவரின் கேள்விக்கு எதிர்மறையாக அவர் அளித்த பதில் கூட நாம் எதிர்பார்க்காத ஒன்று.
“மலாய்க்காரர்களுக்கு நான் உதவுவதை பார்த்து இந்திய சமூகத்தினர் பொறாமைபடக் கூடாது,” என்று அவர் குறிப்பிட்டதும் கூட தேவையில்லாத ஒன்றுதான். மலாய்க்காரர்களுக்கு இந்நாட்டில் சிறப்புச் சலுகை உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். யாரும் பொறாமைபட்டதாகத் தெரியவில்லலை.
இவையெல்லாம் சிறிய விஷயங்களைப் போலத் தோன்றினாலும் நம் மனங்களை அவை அதிக அளவில் பாதித்துவிட்டன என்பதுதான் உண்மை.
ஆக இத்தகைய விவகாரங்களின் பாதிப்புகள் ஜொகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
























