கால்பந்து விமர்சகர் பெட்ரோல் நிலையத்தில் தாக்கப்பட்டு, கண் குழி எலும்பு முறிவுடன் காயமடைந்தார்.

ஒரு கால்பந்து விமர்சகரும் யூடியூபருமான ஜோ சகரியா, கடந்த சனிக்கிழமை பந்தார் ஸ்ரீ தாமான்சாரா அருகிலுள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதில் கண் குழி (Eye Socket) எலும்பு முறிவு உள்ளிட்ட கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை ஜோ சகரியா தனது X (முன்னாள் ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்துள்ளார்.

பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஷம்சுதின் மாமத் கூறுகையில், ஆரம்பகட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர் தனது வாகனத்தின் டயர்களில் காற்று நிரப்பிக் கொண்டிருந்தபோது, பதிவு எண் அடையாளம் காண முடியாத மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அவரை அணுகியதாக தெரியவந்துள்ளது.

“சந்தேகநபர்கள் பாதிக்கப்பட்டவரை பலமுறை தாக்கியதுடன், அந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்”.

“இந்த தாக்குதலின் விளைவாக, பாதிக்கப்பட்டவருக்கு கண் குழி எலும்பு முறிவு மற்றும் பல்வேறு காயங்கள் ஏற்பட்டுள்ளன,” என்று அவர் தெரிவித்தார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இரு சந்தேகநபர்களையும் அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஷம்சுதின் கூறினார்.

இந்த வழக்கு, மலேசிய தண்டனைச் சட்டம் (Penal Code) பிரிவு 325-ன் கீழ், ‘தன்னிச்சையாக கடுமையான காயம் ஏற்படுத்துதல்’ என்ற குற்றத்தின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

“இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவோ அல்லது விசாரணை அதிகாரி டேனிஷ் நூர் அஸ்ரியை 013-6201412 என்ற எண்ணில் தொடர்புகொண்டு விசாரணைக்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக எந்தவொரு கருத்தையும் வெளியிடவோ அல்லது சம்பவம் தொடர்பான வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட எந்தவொரு தகவலையும் சமூக ஊடகங்கள் அல்லது பிற தளங்களில் பகிரவோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்வது காவல்துறை விசாரணைக்கு இடையூறாக அமையக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவம்

இந்த தாக்குதல், கடந்த ஆண்டு நவம்பரில் விளையாட்டு செய்தியாளர் ஹரேஷ் தியோல் மீது நடைபெற்ற தாக்குதலை நினைவூட்டுகிறது. அப்போது, கோலாலம்பூரில் பட்டப்பகலில் இரு நபர்கள் ஹரேஷை தாக்கியபோது, மூன்றாவது நபர் அந்த தாக்குதலை வீடியோவாக பதிவு செய்திருந்தார்.

அந்த சமயத்தில், விளையாட்டு செய்தி இணையதளமான Twentytwo13-ஐ இணைந்து நிறுவிய ஹரேஷ் தியோல், மலேசிய தேசிய கால்பந்து அணியின் குடியுரிமை (Naturalisation) சர்ச்சை குறித்து செய்தி வெளியிட்டு வந்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில், ஹரேஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 37 வயதுடைய ஒருவருக்கு கோலாலம்பூர் மஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம 2,000 அபராதம் விதித்தது. இருப்பினும், மற்ற இரு சந்தேகநபர்களும் இன்னும் தலைமறைவாக உள்ளனர்.

மேலும், ஹரேஷ் தியோல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் “தனிப்பட்ட பிரச்சினை” காரணமாக நடந்தது என்ற காவல்துறையின் விளக்கத்தையும் அவர் நிராகரித்திருந்தார்.