மாலை 4 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் 14 பகுதிகளில் மட்டுமே காற்றுத் தரக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது. அவற்றில் பெரும்பாலான பகுதிகள் ஜொகூர் மாநிலத்தில் உள்ளன
பல பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டு வருவதால், பள்ளி மாணவர்கள் நாளை முதல் வழக்கம்போல் வகுப்புகளுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புகை மூட்டம்(Haze) காரணமாக ஜொகூர் மாநிலம் மற்றும் கோலாலம்பூர், சிலாங்கூர் மாநிலங்களில் உள்ள ஐந்து மாவட்டங்களைத் தவிர, நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்படும்.
கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் கோலாலம்பூரில் பங்சார் மற்றும் புடுவும், சிலாங்கூரில் ஹுலு லங்காட், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் பெர்டானாவும் ஆகும்.
“கல்வி அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட மாநில, மாவட்டக் கல்வித் துறைகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பெற்றோர்களும் பள்ளிச் சமூகத்தினரும் தொடர்ந்து கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலதிக அறிவிப்புகள் அவற்றின் மூலம் வெளியிடப்படும்,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாலை 4 மணி நிலவரப்படி, தீபகற்ப மலேசியாவில் 14 பகுதிகளில் காற்றுத் தரக் குறியீடு (API) ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளது. 48 பகுதிகளில் மிதமான காற்றுத் தரமும், ஐந்து பகுதிகளில் நல்ல காற்றுத் தரமும் பதிவாகியுள்ளன.
ஜொகூர் மாநிலத்தில் அதிகபட்ச API அளவுகள் பதிவாகியுள்ளன. அவை பின்வருமாறு:
– பாசிர் கூடாங் – 177
– லார்கின் – 176
– கோத்தா திங்கி – 165
– பெங்கெராங் – 159
– செகாமாட் – 158
– குளுவாங் – 158
– தங்காக் – 158
– பத்து பஹாட் – 154
திரெங்கானு மாநிலத்தில், கோலா திரெங்கானுவில் API அளவு 162 ஆகவும், பாக்காவில் 154 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஆரோக்கியமற்ற காற்றுத் தரம் பதிவான பிற பகுதிகளில், கோலாலம்பூரில் உள்ள செராஸ் மற்றும் பகாங் மாநிலத்தில் உள்ள ரொம்பின் ஆகிய இடங்களில் தலா 137 என்ற API அளவு பதிவாகியுள்ளது.
காற்றுத் தரக் குறியீடு (API) வகைப்பாடுகள்:
– 0–50: நல்ல காற்றுத் தரம்
– 51–100: மிதமான காற்றுத் தரம்
– 101–200: ஆரோக்கியமற்ற காற்றுத் தரம்
– 201–300: மிகவும் ஆரோக்கியமற்ற காற்றுத் தரம்
– 301 மற்றும் அதற்கு மேல்: அபாயகரமான காற்றுத் தரம்























