பினாங்கு அரசு, பல சாலைகளை ஒருவழிச் சாலைகளாக மாற்றியதற்காகக் கடுமையாகக் குறைகூறப்பட்டுள்ளது.
உச்ச நேரங்களிலும் வார இறுதிகளிலும் விடுமுறை காலங்களிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் ஜாலான் பர்மா, ஜாலான் கெலாவாய், கர்னி டிரைவ் ஆகிய சாலைகள் ஒருவழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.
அதன் தொடர்பில் நேற்றிரவு நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்ட சுமார் 300 பேர், கர்னி டிரைவில் உள்ள கர்னி பிளாசா, கர்னி பேராகன் போன்ற பெரும் விற்பனை மையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய சாலை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினர். சில வியாபாரிகள் தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினர்.
சிலர், ‘ஜாலான் பர்மாவை மீண்டும் இருவழிச் சாலையாக மாற்று’, ‘பூலாவ் திக்குசில் இருவழிப் போக்குவரத்து திரும்ப வரவேண்டும்’ ‘பாதசாரிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் பிடித்திருந்தனர்.
இருவழிச் சாலைகளை மீண்டும் கொண்டுவராவிட்டால் மாநில அரசே “ubah” (மாற்றப்படும்) பண்ணப்படும் என அவர்கள் எச்சரித்தனர்.